இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு 2018-19 ம் நிதி ஆண்டில், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல் மற்றும் வேளாண் இயந்திரங்கள் / கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையம் மானிய விலையில் அமைத்தல் முதலான திட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ3.76 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தில் 8 PTO குதிரைத் திறன் முதல் 70 PTO குதிரைத் திறன் வரை சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர்டில்லர், நெல்நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, நிலம் சமன் செய்யும் கருவி, தட்டைவெட்டும் கருவி, விசைத் தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் துகளாக்கும் கருவி மற்றும் மனித சக்தியால் இயக்கப்படும் கருவிகள் முதலான வேளாண் இயந்திரங்களையும், கருவிகளையும் விவசாயிகள் மானிய உதவியுடன் வாங்கி பயன் பெறலாம்.
மத்திய அரசின் வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்க வழிகாட்டி நெறிமுறைகளின்படி அரசு மானியம் வழங்கப்படும். சிறு, குறு, ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 35 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரையும், இதர விவசாயிகளுக்கு 25 விழுக்காடு முதல் 40 விழுக்காடு வரை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. உயர் தொழில்நுட்ப, அதிக விலையுள்ள இயந்திரங்களை வாங்கிட அதிக பட்சமாக ரூ2.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட முதலாவதாக விவசாயிகள், உழவன் செயலியில் (Uzhavan app) தனது ஆதார் எண்ணுடன் பதிவு செய்திட வேண்டும். பின்னர் அவரது பதிவு மத்திய அரசின் இணையதளமான “agrimachinery.nic.in” ல் இணைக்கப்படும். விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளையும் ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும் (Dealer) தங்களது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். விவசாயிகள் முகவரின் விற்பனை விலையை பேச்சு வார்த்தை மூலம் பேரம் பேசி குறைத்திடலாம். குறைக்கப்பட்ட விலைக்குரிய மானியம் இணைய தளத்திலேயே கணக்கிடப்படும்.
விவசாயி முகவரை ஒருமுறை தேர்வு செய்தபின் வேறுமுகவரை தேர்வு செய்ய இயலாது. குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள் / கருவிகளின் இலக்கு முடிவுற்ற பின்னர் விவசாயிகள் அதே இயந்திரம் அல்லது கருவியை தேர்வு செய்தால், அவர் 1,2,3 என எண்ணிடப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படுவர். ஒரு நிதியாண்டில் தனக்குத் தேவைப்படும் ஏதாவது இரண்டு வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானிய விலையில் விவசாயிகள் வாங்கிட இயலும். அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அதே வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் வாங்கிட இயலும்.
உதவி செயற்பொறியாளர் (வே.பொ), உதவிப் பொறியாளர்(வே.பொ) / இளநிலைப் பொறியாளர்(வே.பொ) ஆகியோர் விவசாயிகளின் நிலத்திற்கு நேரில் சென்று விவசாயிகள் வாங்கிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை ஆய்வு செய்வர்.மேலும் விவசாயி மற்றும் விற்பனை செய்த முகவரால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து விபரங்கள் மற்றும் ஆவணங்கள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்களால் சரிபார்க்கப்படும்.
அதன் பின்னர், விவசாயிக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட விவசாயி மற்றும் ஆய்வு அலுவலர் ஆகியோருடன் கூடிய (Geotagged) புகைப்படத்தினை இணையதளத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் ஆய்வு அலுவலரால் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் மேலாய்வு செய்த அறிக்கை மற்றும் சரிபார்ப்பு பட்டியல் (Check slip) மற்றும் அலுவலரின் குறிப்புரையும் 10 நாட்களுக்குள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்படும். மேற்குறிப்பிட்ட ஆய்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர், இறுதியாக விவசாயியின் வங்கி கணக்கில் உரிய மானியமானது ஆய்வு முடிந்த 10 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்.
வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் குறைந்த வாடகையில் பெற்றிட, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் மானிய உதவியுடன் அமைக்கப்படுகிறது. விவசாயிகள், விவசாயக் குழுக்கள் அல்லது தொழில் முனைவோர் ஆகியோர் பயனாளிகள் ஆவர். இவ்வாறான ரூ.25 இலட்சம் மதிப்புடைய வாடகை மையங்கள் அமைக்க 40 விழுக்காடு மானிய அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.10 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் மையங்கள்பண்ணை சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், குறைந்தபட்சம் 8 உறுப்பினர்கள் கொண்ட விவசாயக் குழுக்கள் மொத்தம் ரூ.10 இலட்சத்திற்கு குறையாத மதிப்புடைய பண்ணை இயந்திரங்களை வாங்கி, வாடகை மையங்களை நடத்தலாம். இதற்கு 80 விழுக்காடு மானிய அடிப்படையில், அதிக பட்சமாக ரூ.8.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. நீடித்த நிலையான மானாவாரி இயக்க திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள குழுக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக 26 எண்கள் டிராக்டர், 45 எண்கள் பவர்டில்லர், மற்றும் 91 எண்கள் இதர வேளாண் இயந்திரங்கள் / கருவிகள் வாங்கிக் கொள்ள நடப்பாண்டில் ரூ86.10 இலட்சங்களும், 5 எண்கள் வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க ரூ.50.00 இலட்சங்களும், 30 எண்கள் கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க ரூ.240.00 இலட்சங்களும் இம்மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மானிய விலையில் கருவிகள் மற்றும் இயங்திரங்கள் பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக உழவன் செயலியில் பதிவு செய்து, பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கொண்டு விவரங்கள் அறிய உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம் அல்லது மத்திய அரசின் இணையத்தளமான www.agrimachinery.nic.inன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், கயத்தார், ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் உதவி செயற் பொறியாளா, வேளாண்மைப் பொறியியல் துறை, 27H, எட்டையபுரம் ரோடு பிரதான சாலை, கனரா வங்கி பின்புறம், கோவில்பட்டி அலுவலகத்தையும், தூத்துக்குடி, கருங்குளம், திருவைகுண்டம் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் உதவி செயற் பொறியாளா, வேளாண்மைப் பொறியியல் துறை, 4/122 A1, ஸ்டேட் பாங்க் காலனி வடக்கு, ஆறுமுகச்சாமி காலனி அருகில், தூத்துக்குடி அலுவலகத்தையும், திருச்செந்தூர், உடன்குடி, ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் உதவி செயற் பொறியாளா, வேளாண்மைப் பொறியியல் துறை, 65/10C முத்து மாலை அம்மன் கோவில் தெரு, திருச்செந்தூர் அலுவலகத்தையும், தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளளார்.


