செய்துங்கநல்லூர் அருகே உள்ள விட்டிலாபுரத்தில் சாலையை சீரமைக்க கோரி கடந்த மாதம் 14ந் தேதி மறியல் போராட்டம் நடந்தது. 1 மாத காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக நெடுஞ்சாலை துறையினர் ஒப்புதல் தெரிவித்தனர். ஆனால் 1 மாதமாகியும் நடவடிக்கை இல்லாத காரணத்தினால் மீண்டும் போரட்டம் நடந்த மக்கள் முடிவு செய்துள்ளனர்..
விட்டிலாபுரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான விட்டிலாபுரம் மணக்கரை சாலை உள்ளது. இந்த சாலை 3 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இந்த சாலை வழியாக முத்தாலங்குறிச்சி, இந்திராநகர், ஆழிகுடி, பொந்தன்பொழி உள்பட பல கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளது. முத்தாலங்குறிச்சியில் உள்ள சுமார் 5 செங்கல் தொழிற்சாலைக்கு இந்த வழியாகத்தான் தினமும் 100க்கு மேற்பட்ட லாரிகள் சென்று வருகிறது. தினமும் டவுன் பஸ் 16 சுற்றுகளும், சுமார் 20க்கு மேற்பட்ட கல்வி வாகனங்களும் இந்த வழியாகத் தான் சென்று வருகிறது.
மேலும் செய்துங்கநல்லூர், விட்டிலாபுரம், வி.கோவில்பத்து, நெல்லை மாவட்டம் கூடன்குளம் ஆகிய இடங்களுக்கு குடிநீர் திட்டங்கள் முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் தான் உள்ளது.
கடந்த வருடம் கூடன்குளம் கூட்டுகுடிநீர் திட்டம் அமைக்கும் போது பைப் லைன் அமைக்க விட்டிலாபுரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலையை நடுமத்தியில் தோண்டி பைப் லைன் அமைத்தார்கள். அப்போது பொதுமக்கள் கேட்ட போது முறையாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நெடுஞ்சாலை துறைக்கு சாலை அமைக்க பணம் கட்டி விட்டது. எனவே குடிநீர் திட்ட பணி முடிந்தவுடன் நெடுஞ்சாலை துறை சார்பாக சாலை அமைக்கும் பணி துவங்கும் என கூறப்பட்டது.
ஆனால் பணி முடிந்து ஓராண்டு முடிந்தும் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் இந்த சாலை நீர் தேங்கி குளமாக இருந்தது.
இதனை கண்டித்து கருங்குளம் ஒன்றியம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் விட்டிலாபுரம் சாலையில் நாற்று நடும் போராட்டத்தினை கடந்த வருடம் நவம்பர் மாதம் நாற்று நடும் நடத்தினர். 1 மாதத்தில் சாலையை சீரமைத்து தருகிறேன் என்று நெடுஞ்சாலை துறையினர் கூறினர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் கடந்த மே மாதம் 14 ந்தேதி காலை 11 மணி அளவில் விட்டிலாபுரத்தில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அரசு பேருந்தை மறித்தனர். அப்போது அங்கு வந்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி சகாய ஜோஸ், இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசி, சப்இன்ஸ்பெகடர் இன்னோஸ் குமார், சதீஷ், அனந்த முத்துராமன், நெடுஞ்சாலைதுறை சாலை ஆய்வாளர் சுசிலா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 1 மாதகாலத்தில் சாலை சீரமைத்து தருவதாக வாககளித்த பின் போராட்டம் கை விடப்பட்டது.
ஆனால் தற்போது 1 மாதம் கடக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. ஆனால் சாலை பணி துவங்குவதற்கான அடிப்படை வேலை கூட துவங்கவில்லை. எனவே உடனடியாக சாலை பணி துவங்கவில்லை யென்றால், மீண்டும் மறியல் பேராட்டத்தில் மக்களை திரட்டி ஈடுபடுவோம் என அனைத்து இந்திய மாதர் சங்க தலைவர் குணேஸ்வரி தெரிவித்துள்ளார்.


