தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பஜாரில் திமுக கலைஞரின் 95 பிறந்த நாள் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் திமுக தெற்கு மாவட்ட பொருப்பாளருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைச்செயலாளரும் பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ லியோனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
அப்போது திண்டுக்கல் ஐ லியோனி பேசுகையில், அதிமுக கலந்து கொள்ளும் கடைசி சட்டமன்ற கூட்டத்தொடர் இதுதான். இதன்பின்பு அவர்களால் அது முடியாது. வருகின்ற 22ம் தேதி நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்புக்கு பின்னர் அதிமுக அரசு கவிழ்ந்து திமுக ஆட்சி மலரும். தனது கொள்ளுப்பேத்திக்கு திருமணம் நடத்தி வீற்றிருக்கும் ஒரே நபர் கலைஞர் மட்டும் தான். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 அப்பாவி மக்களை போலிசார் சுட்டுக்கொன்றனர். அது எடப்பாடி கூறிய நடந்தது. எடப்பாடி எப்போது கை கழுவினாலும் தூத்துக்குடி மக்களின் ரத்தத்தில் தான் கை கழுவுவது அவர் நினைவிற்கு வரும். எடப்பாடிக்கு நான் கள்ளாப்பெட்டி பழனிச்சாமி என்று பெயர் மாற்றி மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. அவருடைய ஒரே நோக்கம் தனது கள்ளாவை நிரம்புவது மட்டும் தான். அதிமுகவில் பேசுவதற்கு என்றே ஒரு அமைச்சரை வைத்துள்ளனர். அவர் தான் ஜெயக்குமார். யார் கேள்வி கேட்டாலும் அவர் தான் பதில் கூறுவார். ஸ்டாலினாக இருந்தாலும் சரி, கமல்ஹாசனாக இருந்தாலும் சரி யாரிடம் கேள்வி கேட்டாலும் அவர் தான் பதில் கூறுவார். அவரைப்பற்றி நான் இப்படி கூறவில்லை. அவருடன் இருந்த டிடிவி தினகரன் தான் கூறியுள்ளார். தற்போது முதல்வரும், துணை முதல்வரும் எங்கு சென்றாலும் அவர்கள் இருவரின் முகத்திலும் ஒரு வித பயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே விரைவில் அதிமுக அரசு கவிழும் திமுக அரசு மலரும் என்றார்.


