தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றிய பகுதியில் 31 பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த பஞ்சாயத்தில் தாமிரபரணி பாசனம் மூலமாக மருதூர் மேலக்கால், மருதூர் கீழக்கால் வழியாக பாசனம் வசதி பெறுகிறது. மேலும் கருங்குளம் ஒன்றியத்தில் வடபகுதியில் ஆலந்தா அணைக்கட்டு மூலமாகவும் மானாவாரி குளங்கள் மூலமாகவும் விவசாயம் நடந்து வருகிறது. கருங்குளம் ஒன்றியத்தில் தென் பகுதியில் மணிமுத்தாறு பாசனம் மூலமாகவும் வாழை பயிர் செய்து வருகின்றனர்.
தற்போது இங்கு வாழைபயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த வருட வாழைபயிர் இறுதி கட்டத்தில் அறுவடைக்கு காத்திருக்கிறது. அறுவடை முடிந்தவுடன் அடுத்த கட்டமாக வாழை பயிரிட விவசாயிகள் மும்முரம் காட்டி வருகிறார்கள். இப்பகுதியில் கசலி, நாடு, கற்பூரவல்லி, சக்கை போன்ற வகை வாழை பயிரிடப்பட்டு வருகிறது.
நாடு வாழை பயிரிடும் விவசாயிகள் 1 ஏக்கருக்கு 1100 வாழை வரை வாழை கன்றுகள் நடவேண்டும். 7 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இரண்டும் முறை பட்டம் வெட்டி பாத்தியை பாதுகாக்க வேண்டும். இதற்கிடையில் இரண்டு தடவை காம்ளக்ஸ், டி.ஏ.பி, பொட்டாஷ் உரங்களை இட வேண்டும். வாழை பயிரில் வேறேதும் நோய் ஏற்பட்டால் கருங்குளம் வட்டார தோட்டக் கலை இயக்குனர் உஷாகுமாரியை தொடர்ப்பு கொள்ளலாம்.
இங்கு விளையும் வாழை பயிர்கள் திரட்டியாகவும் நல்ல விலைலயில் விற்க கூடியதாகவும் உள்ளதால் விவசாயிகள் வாழைபயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.