வல்லநாடு அருகே உடைந்த பாலத்தினை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி & திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே அமைந்துள்ளது அகரம் கிராமம். இந்த கிராமம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது. விஷ்ணு தனது பக்தைக்கு 10 அவதாரங்களை எடுத்துக் காட்டியதாக கருதப்படும் சிறப்பான அஞ்சேல் பெருமாள் கோயில் இங்குள்ளது. இதை காண வெளி மாநிலங்களில் இருந்து மிக அதிமாக பக்தர்கள் வந்து செல்கின்றனர். விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி உள்பட பல கிராமங்களுக்கும், தூத்துக்குடி நகருக்கு மூன்று பைப் லைனுக்கும், கருங்குளம் கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக 32 கிராமங்களுக்கும் இங்கிருந்து தான் குடிதண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக தாமிரபரணி ஆற்றில் உறை கிணறு போடப்பட்டுள்ளது. அதற்கு தனித்தனியாக பம்பிங் அறையும்ம இங்குள்ளது. இதை கண்காணிக்க பல ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இங்குள்ள பைப் லைனை பழுது பார்க்க மற்றும் மோட்டார் இயக்க வெளியே இருந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் ஊழியர்களும வந்த செல்கிறார்கள். இந்த கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் தங்களது அத்தியாவன தேவை மற்றும் கல்வி, மருத்துவத்துக்கு வல்லநாடு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இவர்கள் வந்து செல்லும் சாலை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மருதூர் கீழக்காலில் போடப்பட்ட பாலத்தின் ஒரு பக்க கை பிடிச்சுவர் துண்டிக்கப்பட்டு விட்டது. இதை சீரமைக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரி வந்தனர்.
இதற்கிடையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் இந்தப்பாலம் கைபிடி சுவர் முழுவதும் உடைந்து, தூணில் விரிசல் ஏற்பட்டு பாலம் உபயோக படுத்தாத நிலைக்கு சென்று விட்டது. லாரி ஒன்று லோடு ஏற்றிக்கொண்டு வந்தபோது பாலத்தின் தென்பகுதி உடைந்து லாரி வாய்க்காலில் பாய்ந்தது. இதில் லாரி டிரைவர் காயத்துடன் தப்பித்தார். அதன் பின் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக சாலை குறுகி கொண்டே வந்தது. அதன்பின் இந்த பாலம் வழியாக கார் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு விட்டது. இதனால் அகரம் கிராமம் தீவு போல ஆகி விட்டது.
மேல்சபை உறுப்பினர் முத்துகருப்பன் இந்த பாலம் கட்ட பணம் ஓதுக்கீடு செய்தார். ஆனால் ஏதோ காரணத்தினால் அந்த பணம் திருப்பபெற பட்டு விட்டது. தற்சமயம் வயற்காடுகள் அனைத்து அறுவடை நிலைமைக்கு வந்து விட்டன. ஆனால் அறுவடை இயந்திரம் கொண்டு வந்து அறுவடை செய்ய இயலாத நிலையில் இந்த கிராமத்து மக்கள் உள்ளனர்.
இதுகுறித்து இவ்வூரை சேர்ந்த ஜெகநாதன் கூறும் போது, எங்கள் ஊருக்கு அடிப்படை வசதியான சாலை வசதியை செய்ய அரசு மறுத்து வருகிறது. தூத்துக்குடி பைப்லைன், அருப்புகோட்டை பைப்லைனை பார்வையிட மாவட்ட கலெக்டர், முக்கிய அதிகாரிகள் வந்து செல்கின்றனர். ஆனால் துண்டிக்கப்பட்ட பாலத்தினை சீர் செய்ய யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்கள் கிராம மக்கள் கடந்த சட்டமன்ற தேர்தலை புறகணிக்க முடிவு செய்தனர். ஆனால் மக்களை சமரசம் செய்து வாக்களிக்க வைத்தனர். ஆனால் சுமார் 2 வருடம் கழித்தும் இந்த பாலம் சீர் செய்யப்படவில்லை. எனவே உடனடியாக இந்த பாலத்தினை சீர் செய்து தரவேண்டும் என அவர்கூறினார்.