கருங்குளம் – கொங்கராயகுறிச்சி ஆற்று பாலத்தில் மின் விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பாலம் அமைக்க நபார்டு வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. 16 கோடியே 50 லட்சம் செலவில் பாலம் கட்ட கடந்த 2015 ம் ஆண்டு ஜுலை மாதம் 12 ந்தேதி அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பணம் ஓதுக்கீடு செய்தார். ஸ்ரீவைகுண்டம் எம்.எ.ல்.ஏ சண்முகநாதன் அடிக்கல் நாட்டினார். 19 கண்கள் கொண்ட உயர்மட்ட பாலம் 12 மீட்டர் அகலத்தில் கட்டும் பணி மிக நடந்து முடிந்தது. பல்வேறு காலகட்டத்தில் நீதி மன்ற வழக்கு உள்பட பல பிரச்சனையால் கால தாமதாமாகி கடந்த நவம்பர் 22 ந்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாலத்தினை துவங்கி வைத்தார்.
தற்போது இங்கு போக்குவரத்து துவங்கி விட்டது. ஆனால் பஸ் வசதி எதுவும் செய்து தரவில்லை. இதற்கிடையில் இரவு நேரங்களில் இந்த பாலம் வழியாகத்தான் , கொங்கராயகுறிச்சி, திருச்செந்தூர் பட்டி, அரபாத் நகர், ஆறாம்பண்ணை, ஆழ்வார்கற்குளம், நடுவக்குறிச்சி, மணக்கரை உள்பட கிராம மக்கள் நடந்தும் சைக்கிளிலும் சென்று வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இங்குள்ள பாலத்தில் மின் விளக்கு அமைக்கப்பட வில்லை. எனவே இரவு நேரத்தில் இந்தபாலம் இருண்டு கிடக்கிறது. எனவே இப்பகுதி மக்களில் வாழ்வில் ஒளியேற்ற பாலத்தில் மின் விளக்கு அமைக்கப்படுமா என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.