சாத்தான்குளம் அருகே தம்பி கடையில் தேங்காயை திருடி அண்ணன் கடையில் விற்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் சாலைப்புதூரை சேர்ந்தவர் சுந்தரராஜ், (40). இவர் பேய்க்குளம்- பழனியப்பபுரம் ரோட்டில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் எதிரில் அவருடைய அண்ணன் ஸ்ரீதர் (47) காய்கறி கடை நடத்தி வருகிறார். இருவரும் விவசாயிகள் கொண்டு வரும் தேங்காயை மொத்த விலைக்கு வாங்கி விற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் விவசாயி ஒருவர் தேங்காய் மூட்டை கொண்டு வந்து சுந்தர் கடையில் விற்றாராம். பின்னர் அந்த மூட்டை காணாமல் போனதாம்.
இந்நிலையில் கடந்த 24-ந்தேதி ஸ்ரீதர் கடைக்கு வந்த ஒருவர், விற்பனைக்கு 21 தேங்காய் கொண்டு வந்தாராம். அவரிடம் விசாரித்ததில், முன்னுக்குப் முரணான தகவலை கூறினாராம். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸுக்கு ஸ்ரீதர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் உதவி ஆய்வாளர் ஆழ்வார் விரைந்து வந்து அந்த நபரைப் பிடித்து விசாரித்தார். அவர் ஓட்டபிடாரம் அருகே உள்ள புதியமுத்தூரைச் சேர்ந்த துரைப்பாண்டி (59) எனவும், சுந்தரின் மளிகை கடையில் தேங்காயை திருடி ஸ்ரீதரின் காய்கனி கடையில் விற்க வந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் பேய்க்குளம் பஜாரில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கடந்த வாரம் மளிகை கடையில் தேங்காயை திருடியது இவர்தான் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து துரைப்பாண்டியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தம்பி கடையில் தேங்காய்களை திருடி, அண்ணன் கடையில் விற்றவரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.