தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகக வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமிரபரணி நதி தென் இந்திய நதிகளுள் மிக முக்கிய நதி. வற்றாத ஜுவநதி என பெயர் பெற்றது. கடுமையான வறட்சி ஏற்பட்டாலும் கூட இந்த நதி வற்றுவது இல்லை. மேலும் நெல்லை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்துக்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 40 லிட்டர் வீதம் பல கோடி லிட்டர் தண்ணீர் மணிக்கு ஒருமுறை தருகின்ற நதி. இதற்காக 100க்கும் மேற்பட்ட உறை கிணறு தாமிரபரணியில் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் 8 அணைக்கட்டு 11 கால்வாய் மூலமாக 88 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி தருவதும் தாமிரபரணியே. இதன் மூலம் பிசானம், கார், முன்கார் ஆகிய சாகுபடிகள் சிறப்பாக நடந்தது.
தென்னகத்தின் ஒளிவிளக்காகவே தாமிபரணி விளங்கி வருகிறது. தமிழகத்தில் தஞ்சைக்கு அடுத்த நெல்களஞ்சியம் என பெயர் பெற்ற தாமிபரணி கடந்த 10 ஆண்டுகளாக தனது பொலிவை படிப்படியாக இழந்து வருகிறது. பொதுமக்கள் தங்கள் கழிவுகளை தாமிரபரணியில் கொட்டுகிறார்கள். சாக்கடையை கலக்கிறார்கள். நமது ஒரே குடிதண்ணீர் ஆதாரம் தாமிரபரணி என்று தெரிந்தும் கூட மக்கள் விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தாமிரபரணி நோய் பரப்பும் கிருமிகளின் கூடாரமாகவே மாறி வருகிறது.
தாமிரபரணி நதியில் பொன்னாய் இருந்து நீர் ஊற்றை காப்பாற்றி வந்த மணல், கொள்ளையால் நீர் ஊற்றை இழந்து வழி நெடுக சாக்கடையால் ஆக்கிரமிக்கப்பட்டு, குப்பை கூடாரமாக மாறிவிட்டது.
தற்போது தாமிரபரணியை தூய்மைப்படுத்தும் பணி நெல்லை மாவட்டம் சார்பில் மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் பாபநாசம் முதல் சீவலப்பேரி வரை சீரமைப்பு பணி நடந்தது. 2ம் கட்டமாக நடந்த இந்த பணியில் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். நெல்லையில் கல்லூரி மாணவர்கள், சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள் என மக்கள் ஆவலோடு திரண்டனர். பல இடங்களில் சீமை கருவேல மரங்கள் பொக்கிலின் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
ஆற்றில் உள்ள கழிவு பொருள்கள், பிளாஸ்டிக்பொருள்கள், கழிவுகள், பாட்டில்கள் உள்ளிட்ட பல அகற்றப்பட்டன. சுமார் 60 கிலோ மீட்டரில் இருபுறமும் சேர்த்து 120 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பணி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் திட்டமிட்டபடி இந்த பணி நடைபெறும் என நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார்.
இதுபோல தூத்துக்குடி மாவட்டத்தில் 30 கிலோ மீட்டரில் தான் தாமிரபரணி ஓடுகிறது. மருதூர் அணைக்கட்டில் இருந்து ஆத்தூர் வரை உள்ள இந்த பகுதியில் மிக அதிகமான விவசாய நிலங்களும், தொழில்சாலைகளும், குடிதண்ணீர் உறிஞ்சு கிணறுகளும் உள்ளன. ஆனால் இங்குள்ள தாமிரபரணி ஆற்றில் இருபுறமும் ஆக்கிரமிப்பு நிறைந்து காணப்படுகிறது. ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் அணைககட்டு பகுதியில் தாமிரபரணியை சுத்தப்படுத்தி வைத்துள்ளார். ஆனால் மற்ற இடங்களில் சுத்தப்படுத்தும் பணி எதுவும் நடைபெறவில்லை.
இதுகுறித்து சமூக சேவகர் ஒருவர் கூறும் போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் வெங்கடேஷ் ஆற்றுக்குள் வளர்ந்து நிற்கும் நீர்கருவை மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். ஆனால் நெல்லை மாவட்டத்தில் தற்போது தாமிரபரணியை இரண்டாம் கட்டமாக தூய்மை படுத்தும் பணி துவங்கி விட்டது. ஆனால் தூத்துககுடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்தினை தவிர மற்ற இடங்களில் சுத்தப்படுத்தவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியை தூய்மை படுத்தும் கட்டாய நிலையில் உள்ளோம். காரணம் தாமிரபரணி மூலம் அதிக ஆயக்கட்டுகளை விளைய வைப்பதும் இம்மாவட்டம் தான். சுமார் 21 தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் கொடுப்பதும் இம்மாவட்டம் தான். விருதுநகர் மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், நெல்லை மாவட்டம் கூடங்குளம் வரை குடிதண்ணீர் கொடுப்பதும் தூத்துககுடி மாவட்ட தாமிரபரணி தான்.
தாமிரபரணியில் 3 ல் 2 பங்கை நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் சுத்தப்படுத்திவிட்டார். இருப்பது 1 பங்குதான் அதாவது 30 கிலோ மீட்டர் தான் எனவே தூத்துக்குடி மாவட்டத்து தாமிரபரணியால் பயன்பெறும், தொழிற்சாலைகள், விவசாயிகள், மற்றும் மாணவ மாணவிகள், தொண்டு நிறுவனங்களை கொண்டும், சமூக சேவகர்களை திரட்டி தாமிரபரணியை சுத்தம் செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையின் இருபுறமும் மரம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என அவர் கூறினார்.
இந்த நடவடிக்கையை கோடைககாலத்திலேயே எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.