தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சுப்பிரமணியன் மகன் சண்முகவேல் (8). தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது, பல்வேறு தடகள விளையாட்டுப் போட்டிகளில் பயிற்சி பெற்று வரும் அவர், இதுவரை 7 வயதுக்குள் பட்டோருக்கான 13 மாரத்தான் போட்டியில் பங்கேற்று, 4 போட்டிகளில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இதையடுத்து, நீண்ட தொலைவு ஓடி சாதனை படைக்க வேண்டும் என்ற முயற்சியில், சிறுவன் சண்முகவேல், தூத்துக்குடி மில்லர்புரத்திலிருந்து செக்காரக்குடி வரை 30 கி.மீ. தொலைவை ஓடியபடி கடக்கும் சாதனை முயற்சியில்ஈடுபட்டார். அதன்படி, காலை 5.20 மணிக்கு தனது ஓட்டத்தை தொடங்கிய அவர் 8.02 மணியளவில் 30 கி.மீ. தொலைவை கடந்து சாதனை படைத்தார். 2 மணி 42 நிமிடங்களில் ஓடிய சிறுவன் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.