பொதிகை மலை வறட்சியின் பிடியில் சிக்கி தவிப்பதால் தாமிரபரணியில் கடும் குடிதண்ணீர் பிரச்சனை ஏற்படும் என யாத்திரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தாமிரபரணி, நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தின் உயிர் நாடி. இந்த நதியின் மூலம் தான் இப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிதண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. நெல்லை தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு ஒரு நபருக்கு தினமும் 40 லிட்டர் தண்ணீர் இந்த நதியில் இருந்து தான் கிடைக்கிறது.
தாமிரபரணி வற்றாத நதியாக இருக்க பொதிகை மலைதான் முக்கிய காரணம். பொதிகை மலையில் தாமிரபரணி தோன்றும் இடத்தில் கோடைக்காலமான மே மாதத்திலும் கூட மேககூட்டங்கள் எப்போதுமே நிறைந்து காணப்படுகிறது. இதனால் எப்போதுமே மழை பொழிய பொதிகை மலையில் மிக அதிகமாக மஞ்சு கூட்டம் எனும் மேக கூட்டம் காணப்படும். இதனால் அருகில் செல்பவர்களை கூட மூடி மறைக்கும் அளவுக்கு மேக கூட்டம் இருக்கும் இடமாக பொதிகை மலை காணப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 6200அடி உயரத்தில் பொதிகை மலை உச்சியில் உள்ள அகத்திய பெருமானை தரிசிக்க செல்பவர்கள் மேகத்தின் மீது நடைபோட்டு செல்வதை பெரும் பாக்கியமாக கருதுவார்கள்.
அகத்திய பெருமான் தான் தனது கமண்டல நீரில் இருந்து தாமிரபரணியை உருவாக்கினார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே மே மாதம் 1 ந்தேதி கோடை காலத்தில் தாமிரபரணியில் தண்ணீர் வற்றி விடக்கூடாது என்பதற்காக இரண்டு நாள் இரவு, மூன்று நாள் பகல் என ஒரு கடுமையான பயணத்தினை மேற்கொண்டு இந்த பூஜையை நடத்துவார்கள். பொதிகையடியை சேர்ந்த சிவபக்தர் புருசோத்தம்மன் தலைமையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பூஜை நடந்து வருகிறது.
கடந்த சுமார் 20 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு வனத்துறைக்கு உள்பட்ட பாணதீர்த்தம் வழியாக நடந்து கன்னிகட்டி பங்களாவில் தங்கி மறுநாள் பேயாறு போன்ற ஆறுகளை கடந்து தாமிரபரணி தோன்றும் பூங்குளத்துக்கு மேலே அகத்தியர் மொட்டைக்கு சென்று இந்த பூஜையை செய்து வந்தனர்.
ஒரு காலகட்டத்தில் புலிகள் சரணாலயத்தினை காரணம் காட்டி தமிழ்நாடு பாதை வழியாக பொதிகை மலை செல்வதற்கு வனத்துறை அனுமதி மறுத்துவிட்டனர். எனவே கேரள வழியாக ஆன்மிக யாத்திரை நடந்து வருகிறது. கேரள அரசு சிவராத்திரி வரை இதற்காக ஆன்லைன் புக்கிங் மூலமாக யாத்திரியர்களை மலை உச்சிக்கு அனுப்பி வருகிறார்கள். அங்கு அவர்களை மிரட்டுவது அட்டை பூச்சி கடியும், முட்டு ஏத்தமும், அருகில் செல்வோரை மறைந்து நிற்கும் மேக கூட்டங்களுமே ஆகும். பொதிகை மலையோ, ஒவ்வொரு வருடமும் தனது மழை அளவை குறைத்து கொண்டே இருக்கிறது. இதற்கு மேககூட்டங்களின் தாக்கம் குறைவு கூட காரணமாக இருக்கலாம். தற்போது பிப்பரவரி மாதமே பொதிகை மலையில் மேககூட்டங்களை காணவில்லை. இதனால் யாத்திரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கடந்த சிவராத்திரியையட்டி பொதிகை மலை சென்று திரும்பிய யாத்திரியர் கூறும்போது, பொதிகை மலையில் மேககூட்டங்கள் அதிகமாக இருக்கும். மேலும் செல்லும் இடத்தில் நீர் ஊற்றுகளும், அருவிகளும் அதிகமாக காணப்படும் என கூறினார்கள்.
போகுமிடமெல்லாமல் அட்டை கடித்து நமது காலில் ரத்தம் வந்து விடும் என்றும் கூறியிருந்தார்கள். ஆனால் நான் யாத்திரியை சென்ற போது பெரிய அளவில் அட்டை கடியில்லை. இதற்கு காரணம் ஆங்காங்கே உள்ள நீர் ஊற்றுகள் நின்று விட்டது. இரண்டாம் நாள் பயணத்தில் மேககூட்டம் அதிகமாக நம்மை சூழந்து விடும் அருகில் உள்ள நபர்களை கூட பார்க்க முடியாத அளவுக்கு மேககூட்டத்தின் தாக்கம் நம்மை தாக்கிவிடும் என்றார்கள். ஆனால் மேககூட்டத்தினை காணவே முடியவில்லை. எல்லா பகுதியிலும் வெயில் சுள்ளென்று அடித்து கொண்டே இருந்தது. மழை அதிகமாக பெய்யும் என்று கூறினார்கள். சில இடங்களில் மழை பெய்தது. அதுவும் அதிகமாக இல்லை. இதே நிலை நீடித்தால் தாமிரபரணி வற்றிவிடும் சூழ்நிலை உள்ளது என்று கூறினார்.
இதற்கு காரணம் நாம் சுற்றுசூழல் மீது பற்று வைக்காதது தான் காரணம். பிளாஸ்டிக் பொருள்களை ஆங்காங்கே போட்டு விட்ட காரணத்தினால் புதிதாக செடி மரங்கள் வளர்வது இல்லை. மரங்களை வெட்டி அழித்த காரணத்தினால் பொதிகை மலையில் சுண்டி இழுக்கப்படும் மேக கூட்டம் கூட தற்போது காணாமல் போய் விட்டது.
எனவே அரசு பொதிகை மலையில் ஏன் மழை குறைகிறது. மேககூட்டத்திற்கு இடையூறு செய்யும் காரண கூறுகள் எது என கண்டறிந்து, அந்த குறையை களையவேண்டும். இல்லையென்றால் மணலை பறிகொடுத்த தாமிரபரணி தற்போதும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்க காரணமான பொதிகை மலை ஊற்றையும் பறி கொடுத்து விடும் அவல நிலை ஏற்படும். எனவே அதற்குள் தாமிரபரணியை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாமிபரணி வற்றாத ஜீவநதி என மார்தட்டிகொள்ளும் நாம், நதியை மலையிலும் சமவெளி பகுதியிலும் காப்பாற்ற தவறிவிட்டோம். இதனால் மழை செழிப்பான காலமான ஜனவரி மாதத்தில் கூட அணைகட்டு வற்றிய நிலையில் காணப்படுகிறது. 10 நாள் மழை பெய்தால் கூட ஒரு வருட குடிதண்ணீர் பிரச்சனையை தீர்க்ககூடிய தாமிரபரணி அணைக்கட்டுகளே வறண்டு காணப்படுகிறது. நதியை காக்க முதல் கட்டமாக ஆய்வில் ஈடுபட வேண்டும். மத்திய அரசு மூலமாக தாமிரபரணியை காக்க தீட்ட பட்ட திடடங்களுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்ராதகிருஷ்ணன் உடனே உயிர் கொடுக்க ஆவண செய்ய வேண்டும். தாமிரபரணி தனது உயிர் மூச்சை விட்ட பிறகு, கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் செய்யக்கூடாது.