சாத்தான்குளம் பகுதியில் பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதையொட்டி பேரூராட்சிப் பகுதியில் ஒட்டு மொத்த தூய்மைப்பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி சுகாதாரத்தை பேணாத வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து இப்பகுதியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் சாத்தான்குளம், திருச்செந்தூர், நாசரேத், திருவைகுண்டம், ஆறுமுகனேரி, ஆத்தூர், ஆழ்வார்திருநகரி ஆகிய பேரூராட்சிகளில் இருந்து துப்புரவுப் பணியாளர்கள் சாத்தான்குளத்தில முகாமிட்டு தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.
அனைத்து வார்டு பகுதிகளுக்கு தனித்தனியாக பணியாளர்கள் நியமித்து வீடுகள் மற்றும் தெருக்களில் தேங்கிய குப்பைகள், வாறுகால், சிரட்டை , டயர்களை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தினர். மேலும் சுகாதாரம் பேணாத வகையில் செயல்பட்ட வீடுகளுக்கு அபராதம் விதித்தனர். இதில் சாத்தான்குளம் வட்டடாட்சியர் ராஜிவ்தாகூர் ஜேக்கப், பேரூராட்சிசெயல் அலுவலர்கள் நாகராஜன், நாசரேத் ரெங்கசாமி, திருச்செந்தூர் மனோரஞ்சிதம் மற்றும்வட்டார மருத்துவ அலுவலர் ஐலின்சுமதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோரிஸ், சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ஜேக்கப் உள்பட 80க்கு மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள் பங்கேற்று தூய்மைபணியை மேற்கொண்டனர். இதில் அனைத்து தெரு மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவின் சார்பில், கொம்பன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் இவாஞ்சலிலின் ஜோஸ் தலைமை வகித்தார். ஆசிரியர் சேகர் வரவேற்றார். இதில், சாத்தான்குளம் அரசு சித்த மருத்துவர் வைகுண்டரமணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார். தொடர்ந்து, மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிறகு, கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆசிரியைகள் ஜெனிபர் சுகந்தி, சகாயராணி, ராதா, ரம்யா, ரூபா, விஜிலா, சுமதி, ரதராணி, மலர்கொடி, வசந்தாகமலா, வென்சிராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியை சகாயபபிதா நன்றி கூறினார்.