சாத்தான்குளம் சாலை சீரமைப்புக்கு பிறகும் நிறுத்தப்பட்ட பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் கருங்கடல் ஊராட்சிக்குள்பட்ட நார்த்தன்குறிச்சி ஆலமரத்து பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கும் வடக்கு இளமால்குளம் செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்பட்டதால் அதை சீரமைக்கும் பொருட்டு புதிய தார்சாலை அமைக்க புளியங்குளம், மேலநொச்சிகுளம் வரை சாலை கிளறி போடப்பட்டு 4 மாதங்கள் ஆகியும் பணிகள் தேக்கம்அடைந்து காணப்பட்டன .இதனால் இந்த ஊர்களுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் கிராம மக்களும், பள்ளி மாணவர், மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில் சாலைப் பணி முடிந்து 20 நாள்களுக்கு மேலாகியும் அந்த வழியாக இயக்கப்பட்டு வந்த தடம் 138ஏ, 308, 65என் ஆகிய பேருந்துகள் இன்னும் இயக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் சுமார் 2.கி.மீ. தொலைவு நடந்து வந்து பிற ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆதலால் இக்கிராமங்கள் வழியாக உனடியாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.