செய்துங்கநல்லூர் சந்தையில் மண்பாண்டங்களுக்கு தீடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் கிராமங்களில் மண்பாண்டங்களுக்கு நல்ல மவுசு உண்டு. சமையல் செய்ய மற்றும் உணவு பொருள்களை பாதுகாக்க மண்பாண்டங்களை உபயோகப்படுத்துவார்கள். மண்பானை சமையல், மண்பானை மீன்குழம்பு என மண் பானையில் செய்யும் சமையல் மிகவும் பிரபலமாக இருக்கும். நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் விளங்கியது. ஆனால் காலப்போக்கில் இவையெல்லாம் மாறி விட்டது. எவர்சில்வர் வந்த காரணத்தினால் மண்பாண்டம் மோகம் குறைந்து விட்டது. இதனால் கிராமங்களில் கூட எவர்சில்வர் பாத்திரங்கள் அதிகமாக பெருகி விட்டது. மண்பாண்டம் பொங்கலும் சமையல் செய்ய மட்டும் பயன்படுத்தப்பட்டது. இதனால் மண்பாண்ட தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும் மண் எடுப்பதில் அரசு பல்வேறு கெடுபிடிக்கள் விதித்த காரணத்தினால் மண்பாண்ட தொழிலாளிகள் தங்கள் தொழிலை கை விடும் நிலை ஏற்பட்டது.
தற்போது இயற்கை விவசாயம் இயற்கை சமையல் என பொதுமக்கள் இயற்கை சம்பந்தப்பட்ட விசயங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் மண்பாண்ட சமையலுக்கு மவுசு ஏற்பட்டள்ளது. இதனால் மண்பாண்டங்களை இளைய தலைமுறையினர் கூட ஆவலாக வாங்கி வருகிறார்கள். புதன்கிழமை செய்துங்கநல்லூரில் நடைபெறும் சந்தையில் விதவிதமாக மண்பாண்டங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இதை ஆர்வமாக பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.


