திருச்செந்தூரில் இருந்து கல்லிடைக்குறிச்சி வரை 637 கோடி ரூபாய் மதிப்பில் தொழில் வழித்தடச்சாலை பணிகள் கடந்த ஜீன் மாதம் தொடங்கியது. இந்த பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். சாலை பணிக்காக முதல் கட்டமாக திருச்செந்தூரில் இருந்து வி.எம்.சத்திரம் வரை இரண்டு புறமும் மரங்கள் அகற்றப்பட்டது. பள்ளங்கள் தோண்டப்பட்டு சாலைகள் விரிவு படுத்தும் பணி துவங்கியது.
முதற்கட்டமாக செய்துங்கநல்லூரில் இருந்து திருநெல்வேலி மாவட்டம், வி.எம்.சத்திரம் வரை இருபுறமும் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கி உள்ளது.
நேற்று செய்துங்கநல்லூர் அருகே உள்ள வானிலை ஆராய்ச்சி மையம் பாலம் விரிவு படுத்தும் பணி துவங்கியது. இதனால் சாலை முழுவதும் தோண்டப்பட்டது. எனவே போக்குவரத்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
விட்டிலாபுரம் விலக்கு பகுதியில் இருந்து போக்குவரத்து வசவப்பபுரம் சாலை வழியாக மாற்றப்பட்டது. இதற்காக செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் பேருந்து தடம் மாற்றப்பட்டு, வசவப்பபுரம் சாலை வழியாக நாட்டார்குளம், அனவரதநல்லூர், சமத்துவபுரம் கிருஷ்ணாபுரம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் கிருஷ்ணாபுரத்தில் திருப்பப்பட்டு அதே வழியில் செய்துங்கநல்லூருக்கு அனுப்பபட்டது. இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நேற்று காலை கல்லூரி மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்ட காரணத்தினால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
மாற்று ஏற்பாடு செய்யலாம்.
தற்போது இந்த போக்குவரத்தை ஒரே வழியாக விடாமல் திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் செய்துங்கநல்லூர் சிவந்திப்பட்டி சாலை வழியாக ஸ்ரீராமன் குளம், குத்துக்கல், மங்கம்மாள் சாலை வழியாக ஆச்சிமடம் வந்து பயணிக்கலாம். அதே போல் திருச்செந்தூர் செல்லும் வாகனத்தினை தற்போது போலவே வந்து செல்ல ஏற்பாடு செய்யலாம். இருபுறமும் உள்ள சாலையை ஓன் வே ஆக அறிவித்தால் போக்குவரத்து நெரிசலை தடுக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்ய வேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.


