தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஸ்ரீமூலக்கரை கிராமத்திற்கு உட்பட்ட கஸ்பா என்ற குளம் உள்ளது. இந்த குளம் 433 ஏக்கர் பாசன பரப்பு கொண்டது. இந்த குளம் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் இருந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இன்று ஸ்ரீமூலக்கரை குளத்தினை தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார். அவருடன் சார் ஆட்சியர் பிரசாந்த், ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் தாமஸ் பயஸ் அருள் உள்பட அரசு அதிகாரிகள் வந்திருந்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் தூர்வாரும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் பல குளங்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இன்று ஸ்ரீவைகுண்டம் தாலுகாவைச் சேர்ந்த 433 ஏக்கர் பாசன வசதி கொண்ட ஸ்ரீமூலக்கரை குளத்தில் உள்ள செடிகளை அகற்றும் பணி இன்று தனியார் நிறுவனம் மூலம் தொடங்கியுள்ளது. இதன் பின் குளம் தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெறும். மதகுகள் அனைத்தும் சரி செய்யப்படும். இந்த பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் மகிழ்ச்சி அடையும் வண்ணம் குளத்தினை தூர்வாரி குளத்தில் நீரை சேமிப்பதற்கான முழு நடவடிக்கையும் எடுக்கப்படும். அது மட்டுல்லாமல் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள தனியார் நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு குளத்தினை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். கோரம்பள்ளம் குளத்தினை தூர்வார 11 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் மூலமாக அனைத்து குளங்களும் தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெறும். கோடைகாலத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் குளங்கள் அனைத்தும் பராமரிக்கப்பட்டு நிலத்தடி நீரை அதிகப்பதற்கான முழு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் மக்கள் நலச்சங்கம் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


