
ஒரு நபர் குடும்பஅட்டைகள் யாவும் ரத்து செய்யப்படுவதாக வரும் தவறான தகவல்கள், வதந்திகள் மற்றும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்டஆட்சியர் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியு ள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்த மின்னணு குடும்ப அட்டைகள் 4,71,797 நடைமுறையில் உள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் ஒரு நபருக்கான குடும்ப அட்டைகள் 49,208 உள்ளன. தற்போது ஒரு நபர் எண்ணிக்கை கொண்ட குடும்ப அட்டைகளின் மெய்த்தன்மை குறித்து ஸ்தல தணிக்கை, விசாரணைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் ஒரு நபர் குடும்ப அட்டைதாரர்கள் எவரேனும் காலஞ்சென்றிருந்தால் அவற்றை ரத்து செய்வதற்கும், கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்துக்கொண்டு தனித்தனியாக குடும்ப அட்டைகள் வைத்திருந்தால் அவற்றை ஒருங்கிணைப்பதற்கும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கோவில்பட்டி வட்டத்தில் நாளது தேதிவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 113 குடும்பஅட்டைகளின் (ஒரு யூனிட் குடும்ப அட்டைகள்) உறுப்பினர்கள் காலஞ்சென்றபடியால் ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 25 ஒரு நபர் குடும்ப அட்டைகள் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ள விவரம் கண்டறியப்பட்டதால் அவர்களது பெயர், அவர்களது குடும்பத்தில் உள்ள ஏனைய உறவினர்களின் குடும்ப அட்டையுடன் பெயர் சேர்க்கப்பட்டு மேற்படி 25 குடும்ப அட்டைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தனியாக வசித்து வரும் எந்த ஒரு நபரின் மின்னணு குடும்ப அட்டையும் ஒருபோதும் ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், இறந்து போன நபர்களின் குடும்ப அட்டை மற்றும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருபவர்களின் குடும்ப அட்டைகளின் மீது மட்டுமே உரிய விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே ஒரு நபர் குடும்பஅட்டைகள் யாவும் ரத்து செய்யப்படுவதாக வரும் தவறான தகவல்கள், வதந்திகள் மற்றும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.