தாதன்குளம் அருகே ரயில்வேட் சுரங்க பாதை அமைக்கும் பணியில் தீடீர் ஊற்று பொங்கியதால் பாதிப்பு.
நெல்லை – திருச்செந்தூர் அகல ரயில் பாதையில் தாதன்குளம் ரயில்வே நிலையத்துக்கு கிழக்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் கிளாக்குளம் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வேகேட் வழியாகத்தான் கிளாக்குளம், குருக்கல்கோட்டை, வல்லகுளம், கால்வாய், திருவரங்கப்பட்டி, கெட்டியம்மாள்புரம், அரியநாயகிபுரம், அரசர்குளம், புதுக்குளம், வசவப்பநேனரி, மல்லல், மணல்விளை, உடையனேரி, தேர்க்கன்குளம், பழனியப்பபுரம் உள்பட பேய்குளம் செல்லவேண்டும்.
ஆனால் இந்த ரயில்வே கேட் ஆளில்லா ரயில்வே கேட்டாக உள்ளது. இந்த கேட் வழியாக மினிபஸ் மற்றும் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே சென்று வந்தது. இந்த போக்குவரத்து வாகனங்கள் ரயில் விபத்தில் சிக்கும் அவல நிலையில் இருந்தன.
இதற்கிடையில் இந்த இடத்தில் ரயில்வே சுரங்க பாதை அமைக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக உயரமான சிமெண்ட் காங்கீரிட் தயார் நிலையில் இருந்தது. கடந்த 3 ந்தேதி தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு, அதன் மீது 10 கிலோ மீட்டர்வேகத்தில் ரயில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பின் சுரங்க பாதை தோண்ட ராட்சத இயந்திரங்கள் கொண்டு பணி நடந்த கான்கீரிட பாகங்களை தூக்கி வைத்து ரயில் போக்கு வரத்தினை சீர் செய்து விட்டனர். இதற்கிடையில் இருபுறமும் கூரை வேயப்பட்ட சாலையில் மழை நீர் தேங்காத நிலையில் கனரக வாகனங்கள் செல்லும் நிலையில் இந்த பாலம் அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையில் பாலத்தின் அடியில் தீடீரென்று ஊற்று தோன்றியது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து பாலத்தின் அடியில் தேங்கி நின்றது. இதனால் இந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கிளாக்குளத்தினை சேர்ந்த உலகராஜ் கூறும் போது, ஏற்கனவே எங்கள் ஊரை சுற்றி ஊற்று மிக அதிகம். மழை வந்து விட்டால் ஊருக்கு வர முடியாமல் சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்து விடும். எனவே இந்தஇடத்தில் சுரங்கபாதை அமைத்தால் வெள்ளக்காலங்களில் மேலும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது என ஏற்கனவே கூறி வந்தோம். இதற்கிடையில் தற்போது வறட்சியாக உள்ள நேரத்திலேயே ஊற்று வந்து புதிய சுரங்கபாதை முழுவதும் தேங்கி நிற்கிறது. இந்த இடத்தில் சுரங்க பாதை அமைத்தால் மழை காலங்களில் வாகனங்கள் கடக்க இயலுமா என கேள்வி குறி உள்ளது என்று அவர் கூறினார்.
இந்த சுரங்க பாதையில் இருபுறமும் வலிமையான சுவர் எழுப்பி மழை காலங்களில் கூட பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.