
கிளாக்குளத்தில் சகதியில் சிக்கிய மினி பஸ். பயணிகள் அவதியுற்றனர்.
பேய்குளத்தில் இருந்து கருங்குளத்துக்கு தனியார் மினிபஸ் ஒன்று இயங்கி கொண்டிருக்கிறது. இந்த பஸ் பழனியப்பபுரம், தேர்க்கன் குளம், வசவப்பநேரி, மல்லல், புதுக்குளம், அரசர்குளம், வல்லகுளம், கிளாக்குளம், தாதன்குளம் வழியாக கருங்குளம் வந்து சேருகிறது. இங்குள்ள கிராம மக்கள் இந்த பேருந்தை மட்டுமே நம்பியுள்ளனர். இதற்கிடையில் கிளாக்குளத்தில் ரயில்வே கேட்டில் சுரங்க பாதை அமைக்கும் பணி கடந்த மாதம் துவங்கியது. இதில் சுரங்க பாதை அமைக்க சிமெண்ட் பாளங்கள் தூக்கி வைக்கப்பட்டது. ஆனாலும் எதிர்பாராத விதமாக தண்ணீர் ஊற்று பொங்கி கொண்டிருகிறது. இதனால் தொடர்ந்து பணி செய்ய முடியவில்லை.
இதற்கிடையில் பணியை பாதியில் நிறுத்தி விட்டு ஒப்பந்தகாரர்கள் சென்று விட்டனர். ஆகவே இந்த வழியா£க இயங்கி வந்த மினி பேருந்து நிறுத்தப்பட்டது. ஆனாலும் கிராம மக்களின் உதவியுடன் இந்த பகுதியில் மிகவும் பழமையான மங்கம்மாள் சாலை என்றழைக்கப்படும் பழைய வண்டித்தடத்தினை புதிய வழித்தடமாக உருவாக்கி பேருந்தை மீண்டும் இயக்கினர். ஆனால் அந்த பேருந்து இன்று காலை கிளாக்குளம் ரயில்வே கேட் அருகே வரும் போது அங்கு சுரங்க பாதை அமைக்க தோண்டி போடப்பட்ட சகதியில் சிக்கி கொண்டது. இதனால் பயணிகள் வேலைகளுக்கு செல்ல இயலாமல், மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிக்கு செல்ல இயலாமலும் தவித்தனர். அதன் பின் அவர்கள் சுமார் 6 கிலோ மீட்டர் நடந்து வந்து கருங்குளத்தில் பஸ் ஏறி வெளியூர் சென்றனர்.
இதுகுறித்து கிளாக்குளத்தினை சேர்ந்த கண்ணன் கூறும் போது, எங்கள் கிராமத்துக்கு வருகின்ற ஒரே பேருந்து தனியார் மினி பஸ் தான். தற்போது சுரங்க பாதை அமைக்கும் பணியால் இந்த பேருந்து வழிதடமும் முடக்கப்பட்டு விட்டது. இதனால் பொதுமக்கள் உதவியுடன் பழைய மங்கம்மாள் சாலையை முள்செடி புதர்களை அகற்றி உருவாக்கினோம். தற்போது சாலையில் ஏற்பட்ட சகதியில் மினி பஸ் சிக்கிக்கொண்டது. இதனால் எங்கள் கிராம மக்கள் எங்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே உடனடியாக ரயில்வே சுரங்க பாதை அமைத்து தரவேண்டும். அல்லது பழைய மங்கம்மாள் சாலையை மீண்டும் சீரமைத்து தரவேண்டும் என்று அவர் கூறினார்.
கிளாக்குளம் பகுதியில் உள்ள மக்கள் பிரச்சனை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.