நான் பிறந்தது தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முத்தாலங்குறிச்சி எனும் கிராமம். எங்கள் கிராமத்திற்கு ‘தினத்தந்தி’ நாளிதழ் வருகிறது என்றால் மதியம் 11 மணி ஆகிவிடும். செய்துங்கநல்லூரில் உள்ள முகவர் அந்தப் பகுதியில் உள்ள செய்தித்தாள்களை எல்லாம் வழங்கிவிட்டு, சைக்கிளில் எங்கள் ஊருக்கு வர 11 மணி ஆகிவிடும். அந்தச் சமயத்தில் போட்டிபோட்டுக்கொண்டு தினத்தந்தி படிக்க ஒரு கூட்டமே இருக்கும். அதில் வரும் ‘கன்னித்தீவு’ சித்திரக்கதையைப் படிக்கவும், ‘ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார்’ பகுதியை ரசிக்கவும் ஒரு கூட்டம் இருக்கும். அந்தப் பெருங்கூட்டத்தில் நானும் ஒருவன்.
அப்போது நான் 1984-இல் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஊரில் இருந்த தருணம். ஏதாவது வேலைக்குப் போக வேண்டும் என்ற சூழலில் இருந்தேன். அந்தச் சமயத்தில்தான் தினத்தந்தியில் ‘பிழை திருத்தும் வேலைக்கு ஆள்கள் தேவை’ என்று செய்தி வந்திருந்தது. அதைப் படித்தவுடன் எனக்குள் ஒரு பேராசை. எப்படியாவது இந்த வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என நெல்லையில் நடந்த நேர்முகத் தேர்வுக்குக் கிளம்பினேன்.
அங்கே நிறைய பேர் வந்திருந்தார்கள். பலர் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு எல்லாம் பரிந்துரை செய்ய ஆள்கள் இருப்பதாகக் கூறினார்கள். சிலர் சேரன்மகாதேவி பகுதியில் இருந்து வந்திருந்தார்கள். அவர்களுக்கும் தங்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் தினத்தந்தியில் வேலை செய்கிறார்கள்; ஆகவே தங்களுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் எனக்கோ யாருமே இல்லை; நான் எப்படித் தேர்வேன் என்றே தெரியாமல் தவித்தேன். வரிசையாக எல்லோரும் உள்ளே சென்றுகொண்டிருந்தார்கள். என்னிடம் பள்ளிச் சான்றிதழும், ‘தேவி’ வார இதழில் நான் எழுதிய ஒரு சிறு துணுக்கு மட்டுமே இருந்தன. ஆனால், அங்கு வந்த பலர் பலவிதமான வாய்ப்புகளையும் தகுதிகளையும் வைத்திருந்தார்கள்.
ஒவ்வொரு வாலிபராக உள்ளே சென்று வந்தார்கள். பலர் மகிழ்ச்சியாகத் திரும்பினர். “என் தந்தையின் உறவினர் தினத்தந்தியில் வேலை பார்க்கிறார்; அவரிடம் கடிதம் வாங்கிக் கொடுத்தால் எனக்கு வேலை கிடைத்துவிடும்” என்ற நம்பிக்கையோடு சிலர் சென்றனர்.
ஆனால் எனக்கோ தெரிந்தவர்கள் யாருமே இல்லை. மொத்தத்தில் நானோ செய்துங்கநல்லூர் பக்கத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவன். எங்களுக்கும் தினத்தந்தி குழுமத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. நாளிதழ் படிப்பதோடு சரி; மற்றபடி எதுவும் இல்லை. அப்படி இருக்கும்போது எனக்கு எங்கே வேலை கிடைக்கப்போகிறது?
அங்கிருந்தவர்கள் ஒரு விஷயத்தைக் கூறியிருந்தார்கள். “உள்ளே போய் ‘அய்யா’ என்றுதான் கூற வேண்டும்; ‘சார்’ என்று கூறினால் உன்னைத் திருப்பி அனுப்பிவிடுவார்கள்” என்றார்கள். நான் மனதிற்குள் நினைத்தேன், “உண்மையைச் சொல்வோம்; வேலை கிடைத்தால் சரி” என்று துணிந்தேன்.
அந்த அறையில் ‘சின்ன அய்யா’ (சிவந்தி ஆதித்தனார்) அமர்ந்திருந்தார்கள். அவர்களை அருகில் பார்க்கும்போது எனக்கு உடலெல்லாம் வேர்த்துக் கொட்ட ஆரம்பித்தது; கை நடுங்கியது. அவரை நிமிர்ந்து பார்க்க இயலவில்லை. அவர் கண்களைப் பார்த்தாலே பயம் தொற்றிக்கொண்டது; பேச இயலாமல் நா தழு தழுத்தது.
சின்ன அய்யா கேட்டார்கள்: “பெயர் என்ன?” “காமராஜ்.” “எந்த ஊர்?” “முத்தாலங்குறிச்சி.” “அப்பா என்ன வேலை செய்கிறார்?” “விவசாயம்.” “அம்மா?” “இல்லை.” “ஏதாவது பத்திரிகையில் எழுதியிருக்கிறாயா?” “ஆம், ‘தேவி’ வார இதழில் எழுதியிருக்கிறேன்.” “உனக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் தினத்தந்தியில் வேலை செய்கிறார்களா?” “இல்லை.” “உனக்கு யார் பரிந்துரை செய்வார்கள்?” “தெரியவில்லை.” “தமிழகத்தில் எந்த இடத்திற்குச் சென்று பணியாற்றச் சொன்னாலும் செய்வாயா?”
- என்று கேட்டு நேர்முகத் தேர்வை முடித்துவிட்டார்கள்.
நான் வெளியே வந்தவுடன் என்னை ஒருவர் நேராக மேலாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். “உனக்குத் தெரிந்தவர்கள் யாராவது தினத்தந்தி சம்பந்தப்பட்டவர்கள் இருந்தால் அவர்களிடம் பரிந்துரைக்கடிதம் வாங்கித் தர இயலுமா?” என்று மேலாளர் கேட்டார். “யாரும் இல்லை” என்றேன். “சரி, உங்கள் ஊர் பஞ்சாயத்துத் தலைவரிடம் ஒரு கடிதம் வாங்கிக்கொண்டு உடனே வேலைக்கு வா. உனக்கு எந்த ஊர் என்று சொல்கிறோம்” என அனுப்பி வைத்தார்கள்.
மறுநாள் யாரிடம் செல்வது, பரிந்துரைக்கடிதம் எப்படி வாங்குவது என்று தெரியாமல் அலைந்தேன். என்னுடைய பெரியப்பா வைகுண்ட நாடார், முத்தாலங்குறிச்சி பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர். அவர் செய்துங்கநல்லூரில் வசித்து வந்தார். அவரிடம் சென்று கடிதம் கேட்டேன். அவர், “ஏடே… என் கடிதத்திற்கு மதிப்பு தருவாங்களா?” என்று என்னிடம் கேட்டார்.
நானோ, “தாருங்கள் பெரியப்பா, அந்தக்கடிதத்தைக் கொண்டு கொடுப்போம்” என்று கூறினேன். அதற்குக்காரணம் என்னவென்றால், திருச்செந்தூர், சேரன்மகாதேவி பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை கிடைத்துவிடும்; நமக்கு எங்கே கிடைக்கப்போகிறது? நிச்சயம் பெரியப்பாவின் கடிதத்தைத் தள்ளிபடி செய்துவிடுவார்கள் என்ற எண்ணம்தான்.
சிலர், “தட்சண மாற நாடார் சங்கத்தில் ஒரு கடிதம் வாங்கிக் கொடுங்கள்” என்றார்கள். நாங்கள் சங்கத்திற்குப் போவோம்; ஏதாவது வியாபாரிகள் எங்களை அழைத்துச் செல்வார்கள். இரவு தங்க 1 ரூபாய்க்குப் பாய், தலையணை தருவார்கள். அங்கே படுத்து உறங்கிவிட்டு காலையில் வந்துவிடுவோம். மற்றபடி தலைவர்கள் யாரையும் அப்போது தெரியாது. சங்கத்திற்கும் நம் ஊருக்கும் பெரிய தொடர்பும் கிடையாது. எனப் பல குழப்பங்கள் இருந்தன.
ஆனாலும் பெரியப்பா கடிதம் கொடுத்தார். அதை தினத்தந்தி நெல்லை மேலாளரிடம் கொண்டு கொடுத்தேன். எனக்கு உடனே வேலை கிடைத்தது! நான் மதுரை தினத்தந்தியில் பிழை திருத்தும் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டேன்.
அப்போது மேலாளர் சொன்னார்: “எல்லோருக்கும் சரியான பரிந்துரைக்கடிதம் இருந்தால் மட்டுமே பதவி வழங்குவார்கள். ஆனால் அய்யா, உனக்குப் பரிந்துரைக்கடிதம் வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். நான்தான் ஏதேனும் ஒரு கடிதம் வாங்கி வா எனக் கூறினேன்” என்றார்.
எனக்கு யாரையும் தெரியாது என்று கூறினேன் அல்லவா? ஆதரவற்ற எனக்குப் பரிதாபப்பட்டு, “திக்கற்றவனுக்கு தெய்வமே துணை” என்ற வகையில் சின்ன அய்யா எனக்கு உதவியுள்ளார்கள். இதற்கு நான் என்ன கைமாறு செய்வேன்!
மதுரை, நமது ஊரை விடச் சற்று வெப்பமான பூமிதான். ஆனாலும் தினத்தந்தி அலுவலகம், நாங்கள் தங்கியிருக்கும் அறை எல்லாம் குளுகுளுவென இருக்கும். கிட்டத்தட்ட 6 மாதம் அங்கு வேலை பார்த்தேன். அந்த வேளையில்தான் தினத்தந்தியின் பல நிர்வாக முறைகளை அறிந்தேன். தினமும் சாப்பாடு சிறப்பாக வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவு வழங்கப்படும்; அந்த உணவு அவ்வளவு சிறப்பாக இருக்கும். என் வாழ்க்கையில் அந்த 6 மாதங்கள் போனதே தெரியவில்லை.
எனக்குத் தாய் இல்லாத காரணத்தினால், வேலைக்கு வரும்போது தங்குவதற்குப் பாய், போர்வையெல்லாம் கொடுத்து அனுப்ப ஆள் இல்லை. எனவே நான் லுங்கியைத் தரைவிரிப்பாகப் பயன்படுத்தித் தூங்கி வந்தேன். எனக்கு ஒரு பாய், போர்வை வாங்க வேண்டும் என ஆசை. நான் வேலையில் சேர்ந்து ஒரு மாதம் போய்விட்டது. முதல் மாதச் சம்பளத்தில் வாங்கலாம் என நினைத்திருந்தேன். அப்போது எதிர்பாராத விதமாகச் சின்ன அய்யா மதுரை அலுவலகத்திற்கு வந்தார்கள். ஊழியர்களைத் தனித்தனியாகச் சந்தித்தார்கள்.

என்னையும் சந்தித்தார்கள். “ம்… உன் பெயர்?” “காமராஜ்.” நிமிர்ந்து பார்த்தார்கள். “இப்போதுதான் வேலைக்குச் சேர்ந்தாயா?” என்றார்கள். “ஆம்” என்றேன். “ம்… சரி” என அனுப்பிவைத்தார்கள்.
வெளியே வந்து நான் வேலைக்குக் கிளம்பும்போது, மேலாளர் எனக்கு ஒரு பாய், போர்வையைக் கொடுத்து அனுப்பினார். என்னைப்போல் பாய், போர்வை இல்லாமல் இருந்த ஐந்து பேருக்கு அது வழங்கப்பட்டிருந்தது. ஆச்சரியப்பட்டுப்போனேன்!
எங்களையெல்லாம் நன்றாகக் கண்காணித்து, யாருடைய நிலைமை எப்படி இருக்கிறது என அறிந்து உதவும் தயாள குணம் கொண்டவர் சின்ன அய்யா. அய்யாவை என் வாழ்நாளில் மறக்கவே இயலாது.
எதிர்பாராத விதமாக எனது குடும்பச் சூழ்நிலை காரணமாக நான் வேலையை விடவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும் அய்யாவின் நினைப்பு எப்போதும் வந்துகொண்டே இருந்தது. எந்தவொரு ஆதரவும் இல்லாத எனக்கு அந்தக்காலத்திலேயே அய்யா தன்னுடைய அரவணைப்பில் வேலை கொடுத்து ஆதரித்தார். அவருக்கு நன்றிக்கடன் செலுத்த, “எப்போதுமே நாம் எழுத்துத்துறையை மட்டும் விட்டுவிடக் கூடாது” என நினைத்தேன்; தொடர்ந்து எழுதி வந்தேன்.
இதழியல் தொடர்பு விட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காகத் ‘தினகரன்’ நாளிதழில் பகுதிநேர நிருபராகப் பணியாற்றினேன். அந்தச் சமயத்தில் நெல்லை கவிநேசன் அய்யா வெளியிடும் பொங்கல் மலர், தீபாவளி மலர் உள்பட முக்கிய மலர்களில் கட்டுரைகளும் சிறுகதைகளும் எழுதி வந்தேன்.
இன்று நான் தென்தமிழ்நாட்டில் சிறப்புப்பெற்ற வரலாற்று எழுத்தாளராகிவிட்டேன். என்னுடைய ‘அருள் தரும் அதிசய சித்தர்கள்’ என்ற தொடர் தினத்தந்தியில் தொடராக வெளியானது. அந்தத் தொடர் தினத்தந்தி பதிப்பகம் மூலமாகவே நூலாகப் பதிப்பிக்கப்பட்டு, இரண்டு பதிப்புகள் வெளியாகி எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
அதுபோன்று சின்ன அய்யா காலத்தில் தொடங்கிய பேரன்பு, தற்போது ‘இளைய அய்யா’ காலம் வரையிலும் சிறப்பாகத் தொடர்கிறது.
தூத்துக்குடி நெய்தல் புத்தகக் கண்காட்சி 2023-இல், மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ் அய்யா அவர்கள் புத்தகக் கண்காட்சியையொட்டி 11 நாள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார். விழா தூத்துக்குடி சங்கரபேரியில் நடந்தாலும் கூட, கோவில்பட்டி கி.ரா. நினைவகம் மற்றும் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்திலும் நிகழ்ச்சிகள் நடக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். புத்தகக் கண்காட்சி நடத்தும் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். ஆகவே திருச்செந்தூர் சின்ன அய்யா சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்திற்கு நான் ஒரு நாள் பேச்சாளராகச் சென்றேன்.
இதையொட்டி அங்கேயும் புத்தகக் கண்காட்சி, கலை நிகழ்ச்சி, பேச்சாளர் அரங்கம் ஆகியவை நடந்தன. 28.04.2023 வெள்ளிக்கிழமை நான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிவந்தி ஆதித்தனார் குறித்தும், பொருநைக்கரை நாகரிகம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் குறித்தும் பேசினேன். என்னோடு ஆதித்தனார் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முதுமொத்தான் மொழி கதிரேசன், திருச்செந்தூர் நூலகர் பாலமுருகன், சிஷ்யன் சுடலைமணிச்செல்வன் உள்படப் பலர் கலந்துகொண்டனர். என்னுடைய புத்தகத்தையும் கண்காட்சியில் வைத்திருந்தோம். நிகழ்விற்கு முன்னதாக, பத்திரிகையுலகின் முடிசூடா மன்னன் சின்ன அய்யா அவர்களின் சிலையை வணங்கி நின்றேன்.
நினைத்துப் பார்க்கிறேன்… என்னைப்போல் எத்தனையோ பேருக்குக் கண்கண்ட தெய்வமாக முடிசூடா மன்னர் சின்ன அய்யா இருந்திருப்பார் என நினைத்துப் பார்க்கும்போது பெருமைப்பட்டுக்கொண்டேன்.
தற்போது நான் ‘வணக்கம் ஸ்ரீவை’ இணையதள இதழின் ஆசிரியராகவும், மும்பையிலிருந்து வெளிவரும் ஒரே வார இதழான ‘வணக்கம் மும்பை’ இதழின் சிறப்புச் செய்தியாளராகவும் பணியாற்றி வருகிறேன். ‘சான்றோர் மலர்’ ஆசிரியர் குழுவிலும், ‘காவ்யா காலாண்டு இதழ்’ ஆசிரியர் குழுவிலும் இருக்கிறேன். ‘பொன் சொர்ணம் பதிப்பகம்’ நடத்தி வருகிறேன். என்னுடைய இணையதளத்தை 145 நாடுகளில் உள்ள தமிழர்கள் பார்த்து வருகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அன்று அய்யா எனக்குத் தந்த அந்த வாய்ப்புதான்.
இதுவரை 100 புத்தகங்கள் எழுதியுள்ளேன். தமிழ்நாடு அரசின் ‘கலை நன்மணி’, ‘தமிழ்ச்செம்மல்’, ‘பசுமை முதன்மையாளர்’, ‘வனத்துறை விருது’, ‘தனிநபர் நூலக விருது’ போன்ற 5 அரசு விருதுகளும், 65-க்கும் மேற்பட்ட பிற விருதுகளும் கிடைத்துள்ளன. இவை எல்லாமே எனக்குக் கிடைத்த பெருமைதான்.
இதுபோன்று சின்ன அய்யாவை நினைவுகூரும் பல்வேறு நிகழ்ச்சிகள் என் வாழ்நாளில் நிறைந்துள்ளன. தற்போது அவரது பிறந்தநாள் விழாவில் தட்சண மாற நாடார் சங்கம் சார்பில் வெளியிடும் இந்த இதழில் கட்டுரை எழுதவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சான்றோர் மலர் ஆசிரியர் குழுவில் நான் இருக்கிறேன் என்பது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் என்றே நினைக்கிறேன்!


