
- 1936 செப். 24: சி.பா.ஆதித்தனார் – கோவிந்தம்மாள் தம்பதிகளின் 2-வது புதல்வராகப் பிறந்தார். (சென்னை ராமகிருஷ்ணர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். மாநிலக் கல்லூரியில் படித்து “பி.ஏ.” பட்டம் பெற்றார்).
- 1950 மே 2: “தினத்தந்தி”யின் டைரக்டர் பொறுப்பை ஏற்றார்.
- 1961 ஏப். 14: சென்னையில், சொந்தக் கட்டிடத்தில் “தினத்தந்தி” அலுவலகத்தை காமராஜர் திறந்து வைத்தார்.
- 1963 செப். 1: கோவையில் “தினத்தந்தி” பதிப்பு.
- 1967 ஜன. 18: நெல்லையில் “தினத்தந்தி” பதிப்பு.
- 1968 ஏப். 26: வேலூரில் “தினத்தந்தி” பதிப்பு.
- 1968 ஆக. 27: “தினத்தந்தி” வெள்ளி விழா, முதலமைச்சர் அண்ணா தலைமையில் நடந்தது.
- 1972 டிச. 22: கடலூரில் “தினத்தந்தி” பதிப்பு.
- 1976 செப். 16: சேலத்தில் “தினத்தந்தி” பதிப்பு.
- 1978 டிசம்பர்: பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய அணித் தலைவராகக் கலந்துகொள்ளல்; இந்திய அணிக்கு 28 பதக்கங்கள் (தங்கம் 11, வெள்ளி 11, வெண்கலம் 6).
- 1979 செப். 24: பெங்களூருவில் “தினத்தந்தி” பதிப்பு.
- 1982: சென்னை “ஷெரிஃப்” ஆக நியமனம்.
- 1984: ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நிதிக்கமிட்டித் தலைவராகத் தேர்வு.
- 1986: பல வண்ண “ஆஃப்செட்” அச்சு இயந்திரம் அமைக்கப்பட்டது.
- 1987: இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகத் தேர்வு; 9 ஆண்டுகள் பதவி வகித்தார்.
- 1990: ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் துணைத்தலைவராகத் தேர்வு.
- 1990 ஜூன் 25: தென்காசி காசி விசுவநாதர் கோவிலில், 178 அடி கோபுரத்தைக் கட்டி முடித்து கும்பாபிஷேகம் நடத்தினார்.
- 1991 மார்ச் 13: புதுவையில் “தினத்தந்தி” பதிப்பு.
- 1993 ஏப். 18: “தினத்தந்தி” பொன் விழா.
- 1994 ஜூன் 16: ஈரோட்டில் “தினத்தந்தி” பதிப்பு.
- 1994 நவ. 23: மதுரை காமராசர் பல்கலைக்கழகம் “டாக்டர்” பட்டம் வழங்கியது.
- 1995 ஜூன் 15: சர்வதேச ஒலிம்பிக் விருதை, சர்வதேச ஒலிம்பிக் சங்கம் வழங்கியது.
- 1995 அக். 25: அண்ணாமலைப் பல்கலைக்கழகம் “டாக்டர்” பட்டம் வழங்கியது.
- 1996 ஏப். 1: நாகர்கோவிலில் “தினத்தந்தி” பதிப்பு.
- 1999 ஆக. 29: தஞ்சாவூரில் “தினத்தந்தி” பதிப்பு.
- 2001 பிப். 15: திண்டுக்கல்லில் “தினத்தந்தி” பதிப்பு.
- 2004 ஆக. 31: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் “டாக்டர்” பட்டம் வழங்கியது.
- 2007 நவ. 12: சென்னைப் பல்கலைக்கழகம் “டாக்டர்” பட்டம் வழங்கியது.
- 2008 ஜன. 26: “பத்மஸ்ரீ” விருது பெற்றார்.
- 2008 செப். 5: மும்பைப் பதிப்பு தொடக்கம்.
- 2013 ஏப். 19: மறைவு.
தந்தியின் துணை நிறுவனங்கள்
சின்ன அய்யா டாக்டர் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாரின் தீவிர முயற்சியால் பல நிறுவனங்கள் தோன்றின. இளைய அய்யா பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அதைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
பத்திரிகை உலகில் வெற்றிக்கொடி நாட்டிய ‘தினத்தந்தி’ நிறுவனம், ‘வரலாற்றுச் சுவடுகள்’ என்ற புத்தகத்தை வெளியிட்டு, பதிப்பக உலகில் கால் பதித்தது. அதோடு ‘ஹலோ எஃப்.எம்.’, ‘தந்தி டி.வி.’, ‘டி.டி. நெக்ஸ்ட்’ (ஆங்கிலப் பத்திரிகை), இணையதளம் ஆகியவை அதன் துணை நிறுவனங்கள் ஆகும். விளையாட்டுத் துறையையும் அது விட்டுவைக்கவில்லை. தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ‘சேப்பாக் சூப்பர் கில்லீஸ்’ அணியாகக் களமிறங்கியது. அது பற்றிய விவரம் வருமாறு:
1999-ம் ஆண்டு தினத்தந்தி இணையதளம் தொடங்கப்பட்டது. அதன் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு உள்ளூர் செய்தி முதல் உலகச் செய்திகள் உள்பட பலதரப்பட்ட தகவல்களைச் சுவைபட வழங்கி, சேவையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் அறிந்துகொள்ளும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கையாண்டு புதுப்பொலிவுடன் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை வாசகர்கள் எளிதில் படிக்கும் வகையில் பத்திரிகை உலகில் கொடிகட்டிப் பறக்கும் தினத்தந்தி நிறுவனம், 2012-ம் ஆண்டு முதல் தொலைக்காட்சி உலகிலும் கால்பதித்தது. தினத்தந்தியின் முத்திரையோடு களமிறங்கிய ‘தந்தி டி.வி.’ வெகு விரைவிலேயே மக்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தது. அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் துளைத்தெடுக்கும் ‘கேள்விக்கு என்ன பதில்?’, இரு தரப்பு கருத்துகளையும் நேரலையில் பதிவு செய்யும் ‘ஆயுத எழுத்து’ போன்ற நிகழ்ச்சிகள் தந்தி டி.வி.யின் புகழை கிடுகிடுவென உயர்த்தின. அத்துடன் தமிழ் செய்தி சேனல்களின் வரலாற்றில் புது மைல்கல்லாக, 24 மணிநேர நேரலையையும் தந்தி டி.வி. வழங்கியது. அதனால் நள்ளிரவு நிகழ்வுகளையும் உடனடிச் செய்திகளாகப் பார்க்க முடிந்தது.
பி.பி.சி. சேனலுடன் இணைந்து இங்கிலாந்தில் இருந்து நேரலையில் வழங்கும் ‘பி.பி.சி. தமிழ் செய்திகள்’, அரசியல் நிலவரங்களைக் நகைச்சுவை கலந்து கொடுக்கும் ‘ஏழரை’, பெருந்தலைவர்களை மக்களோடு விவாதிக்க வைக்கும் ‘மக்கள் மன்றம்’ போன்ற நிகழ்ச்சிகள் தந்தி டி.வி.க்கான மணிமகுடங்கள். தமிழ் மொழியைப் பட்டிதொட்டியெங்கும் வளர்க்கும் முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட தினத்தந்தி பத்திரிகை பாமர மக்களுக்கு எளிய தமிழைப் பயிற்றுவித்ததைப் போன்றே, இன்று ஆங்கில மொழிக் கல்வியை ‘டி.டி. நெக்ஸ்ட்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையின் மூலம் கற்றுக்கொடுத்து வருகிறது. மென்மையான ஆங்கில வார்த்தைகள், எளிய ஆங்கில நடை, சிறிய வாக்கியங்கள்… என செய்திகளின் மூலம் ஆங்கில வழிக் கல்விக்கு அடித்தளமிடுகிறது. இது இப்போது சென்னையில் இருந்து வெளியாகிறது.
‘வரலாற்றுச் சுவடுகள்’ தொடரைப் புத்தகமாக வெளியிட்டால் அனைவரும் படிக்கவும், பாதுகாக்கவும் வசதியாக இருக்கும் என்று வாசகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அவர்கள் விருப்பத்தை ஏற்று ஐயா டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் புத்தகமாக வெளியிட்டார்கள். “வரலாற்றுச் சுவடுகள்” இதுவரை 4 பதிப்புகளைக் கண்டுள்ளது. ஒரு லட்சம் பிரதிகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து “இளைய ஐயா” சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அவர்கள் ‘தினத்தந்தி’ பதிப்பகத்தைத் தொடங்கினார்கள். இந்தப் பதிப்பகத்தின் மூலம் சிவந்தி ஆதித்தனார் சாதனை சரித்திரம், தமிழ் சினிமா வரலாறு (பாகம்-1), ஆயிரம் ஆண்டு அதிசயம், ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு, இலங்கைத் தமிழர் வரலாறு, புதையல் ரகசியம், மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள், ஆளுமைத்திறன், பாதை தெரியுது பார், பரபரப்பான வழக்குகள், சிறகை விரிக்கும் மங்கள்யான், உலகை உலுக்கிய வாசகங்கள், நம்ப முடியாத உண்மைகள், கலாம் ஒரு சரித்திரம், 27 நட்சத்திரத் தலங்கள் பரிகார முறைகள் உள்பட பல புத்தகங்களை வெளியிட்டனர்.
எல்லாத் துறைகளிலும் கலக்கிக் கொண்டிருக்கும் தினத்தந்தி நிர்வாகம், விளையாட்டுத் துறையிலும் கில்லியாகவே வலம் வருகிறது. தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியாகக் களமிறங்கி எதிரணிகளைப் பந்தாடியது. 2016-ல் இறுதிப்போட்டி வரை பயணித்த சூப்பர் கில்லீஸ், 2017-ம் ஆண்டு வெற்றியை ருசித்தது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற வீரர்கள் நிறைந்திருந்த அணியைச் சர்வ சாதாரணமாகப் பந்தாடியது. கடைசி 5 ஓவரில் 50-க்கும் மேற்பட்ட ரன்கள் தேவைப்பட்ட நிலையில், எதிரணியினரின் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டு வெற்றிக்கொடியை ஏற்றினார்கள்.
—


