தூத்துக்குடி மாவட்டத்தில் நெற்பயிர்கள் கருகும் அபாயத்தில் உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஆட்சியருக்கு அவர் அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரவருணி ஆற்றுப் பாசனப் பகுதிகளில் இரண்டு ஆண்டுகள் கடும் வறட்சி நிலவியது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த மழை காரணமாக தாமிரவருணி ஆற்றின் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தென்கால், வடகாலில் தண்ணீர் திறக்கப்பட்டன.
வடகால், தென்கால் மூலம் திறக்கப்பட்ட தண்ணீரால் குளங்கள் ஓரளவு நிரம்பிய நிலையில், விவசாயிகள் பிசான சாகுபடியை தொடங்கினர். ஒரு சில பகுதிகளில் நெல் விளைந்த நிலையில் உள்ளது. பல பகுதிகளில் நெற்பயிர்கள் பொதி பருவத்தில் உள்ளன. அப்படியுள்ள சில பகுதிகளில் உள்ள குளங்களில் போதுமான அளவு நீர் இல்லை. இதனால் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ள பகுதிகளை, மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் பார்வையிட்டு அப்பகுதி குளங்களுக்கு தண்ணீர் வருவதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.