
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயில் வைகாசி அவதாரத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
நவதிருப்பதி கோயில்களில் 9ஆவது தலமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் வைகாசி அவதாரத் திருவிழா மே 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் காலையிலும், மாலையிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.
மே 23ஆம் தேதி 5ஆம் திருவிழாவை முன்னிட்டு நவதிருப்பதி கோயில் சுவாமிகள் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்க்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்தபெருமாள், பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள், தென்திருப்பேரை நிகரில்முகில் வண்ணன், இரட்டை திருப்பதி செந்தாமரை கண்ணன், தேவர்பிரான், திருக்கோளுர் ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள் ஆகியோரை சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்து வரவேற்றார். பின்னர், சுவாமி நம்மாழ்வாரை மதுரகவி ஆழ்வார் மங்களாசாசனம் செய்தார். இரவில் 9 சுவாமிகள் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் மதுரகவி ஆழ்வார் தந்தப் பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. 9ஆம் திருவிழாவான ஞாயிற்றுக் கிழமை காலை 6.30 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் தேருக்கு எழுந்தருளினார். காலை 8.10 மணிக்கு பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். ரதவீதிகளை சுற்றி வந்த தேர் காலை 9.15 மணியளவில் நிலையை அடைந்தது. மாலை 5.30 மணிக்கு உத்திராதி மடத்தில் திருமஞ்சனம், கோஷ்டியும், இரவு தவழ்ந்த கிருஷ்ணன் கோலத்தில் வீதி புறப்பாடும் நடந்தது.
தேரோட்டத்தில் கோயில் நிர்வாக அதிகாரி விஸ்வநாத், முன்னாள் அறங்காவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆதிநாதன், அதிமுக நகரச் செயலர் செந்தில் ராஜ்குமார் உள்பட திரளான பலர் கலந்து கொண்டனர்.