திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், பரணி வரலாற்று மையம், ஜே.சி.ஐ.ட்ரெனட்ªச்டர்ஸ் இணைந்து உலக மரபு வாரத்தை முன்னிட்டு மரபு நடை பயணம் நடந்தது. நெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய கட்டிடம் நெல்லை அரசு அருங்காட்சியம், தொல்லியல் தளமான தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களை 50 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.
ஆதிச்சநல்லூர் அருகே புளியங்குளத்தில் கட்டப்பட்ட முதுமக்கள் தாழி தகவல் மையம், மற்றும் ஆய்வு நடந்த இடங்களை பார்வையிட்டபோது எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கம் அளித்தார். தொடர்ந்து சிவகளையில் ஆசிரியர் மாணிக்கம் விளக்கம் அளித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசக்திவள்ளி பேசுகையில்,
நவம்பர் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை மரபு நடை வாரம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பழமையான பாரம்பரியமான தொல்லியல் தளம் இந்த ஆதிச்சநல்லூர் தளம். இந்த ஆதிச்சநல்லூர் வரலாறை வருங்கால தலைமுறையினர் தெரிந்து கொள்வது தான் இந்த மரபு நடை பயணத்தின் முக்கிய நோக்கம். இன்றைய தினம் முதலில் மிகவும் பழமையான கல் கட்டிடமான திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட்டோம். அதன்பின்னர் ஆதிச்சநல்லூருக்கு வருகை தந்து பார்வையிட்டுள்ளோம். ஆதிச்சநல்லூர் குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கம் அளித்தார். அதன்பின்னர் சிவகளை செல்ல உள்ளோம். நமது பாரம்பரியம், நமது தமிழ் சமுதாயத்தின் பாரம்பரியம் மிகவும் பழமையானது. அதனை வருகின்ற இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்வதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி, பரணி வரலாற்று மையம் நிறுவனர் சண்முகவேல், ஆய்வு மாணவர் ஆறுமுக மாசன சுடலை, வெங்கடராமன், ஜே.சி.ஐ.ட்ரெனட்செட்ர்ஸ் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


