தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க இடம். பாண்டியநாட்டின் தலை நகரான கொற்கை, ஆதிச்சநல்லூரில் இருந்து 15 கி.மீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது. இங்கு அகழாய்வு பணி 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. ஆய்வில் அதிச்சநல்லூரில் 114 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை 4 கட்ட அகழாய்வு குறித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இங்கு எடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் சென்னையிலும், வெளிநாடுகளிலும் உள்ளன. எனவே ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தவும், அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியம் அமைத்து பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.
என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு கடந்த 7 ந்தேதி நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய தொல்லியல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு செய்வது குறித்து ஆய்வு செய்ய தொல்லியல்துறை தென்மண்டல இயக்குனர் சத்யபாமா தலைமையில், 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் நிலையில், அதனடிப்படையில் ஆதிச்சநல்லூரில் மறு அகழாய்வு செய்வது குறித்து முடிவு செய்யப்படும். தமிழக அரசுத்தரப்பில் அகழாய்வு பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்புவதற்கான தொகை ஒரு வாரத்தில் ஒதுக்கப்படும்” என்று கூறப்பட்டிருந்தது. இதற்கிடையில் ஆதிச்சநல்லூரை சுற்றி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும். இங்கு புறகாவல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும். எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
தற்போது ஆதிச்சநல்லூரில் வேலி அமைக்கும் பணியை மத்திய அரசு துவங்கியுள்ளது. இதற்காக வீரளபேரி என்னும் கிராமத்தில் இருந்து கால்வாய் ரயில்வே கேட் வரை குழி தோண்டி கான்கிரிட் அமைக்கும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது. சுமார் 300 மீட்டர் நடைபெறும் இந்த பணியை மத்திய அரசின் தொல்லியல் துறை செய்துவருகிறது.