
நான் ஆரம்ப பள்ளி படித்தது, எங்கள் ஊரில் உள்ள புனித வளன் ஆர்.சி. துவக்கப்பள்ளி, தொடர்ந்து 6 வது வகுப்பை கிறிஸ்து ராஜா உயர்நிலைப்பள்ளியில் படித்தேன். தொடர்ந்து 7 முதல் 10 வது வகுப்பு வரை பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி.
இந்த பள்ளிகளில் எல்லாம் கிறிஸ்து மஸ் விழா மிகச்சிறப்பாக நடைபெறும். நானும் ஆவலோடு கலந்து கொள்வேன். எனக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போடவேண்டும் என ஆசை முடியவில்லை.
படிப்பு முடிந்து நான் பஸ் கண்டக்டராக பணி புரிந்த போது எனது அக்காள் ஊரான ஆறாம்பண்ணையில் குடியேறினேன். அங்குள்ள ஆர்.சிகோயிலில் திருவிழா நடைபெறும். சப்பர பவனி நடைபெறும். அவ்வேளையிலும் அவர்களோடு பங்கு கொள்வேன். அந்த ஆர்வமே.. என்னை நாடகம் எழுதி நடிக்க வைத்தது. 1991 ல் ‘மாமனின் காதலி’ என்னும் நான் எழுதி இயக்கி நடித்த நாடகம் அரங்கேறியது.
ஆனாலும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் எட்டாத கனியாக இருந்தது. இதற்கிடையில் எனது மகன் அபிஷ்விக்னேஷ் மனோன்மணியன் சுந்தரனார் பல்கலைகழகத்தில் முதுநிலை ஊடகவியல் படித்து வருகிறார். அவர் கிறிஸ்துமஸ் விழாவை யொட்டி கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போடுகிறேன் என்றவுடன் துறை தலைவர் பாலசுப்பிரமணிய ராஜா, பேராசிரியர்கள் ராதா உள்பட முக்கியமானவர்கள் முன்னிலையில் அவன் தோன்றினான்.
அவனுடைய சக மாணவர்கள் கொடுத்த உற்சகம் அவனை மேலும் ஊக்கப்படுத்தியிருக்கவேண்டும். மறுநாளே கிறிஸ்மஸ் விழாவில் வெளியிட அவனே பாடலை படி ஒரு சிறு குறும்படம் ஒன்றையும் வேகமாக தயாரிக்க ஆரம்பித்து விட்டான்.
வாழ்த்துக்கள் அபிஷ் விக்னேஷ். தந்தைக்கு கிடைக்காத வாய்ப்பும், வாழ்த்தும் மகனுக்கு கிடைக்கும் போது நமக்கும் பலவிதமான சந்தோஷம் கிடைக்கும் தானே.
இந்த கிறிஸ்துமஸ் திருவிழா மனதுக்கு இதமாக உள்ளது.