தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தலைமை செயலாளர் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதியில் பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வினியோகம் செய்யும் பணிகள், தெரு விளக்கு பராமரிப்பு பணிகள், சமுதாய கழிப்பறைகள் பராமரிப்பு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்திட வேண்டும்.
இப்பணிகளில் அதிகமான கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு சிரான குடிநீர் வழங்கிடவும், தெருவிளக்குகளை மாலை நேரங்களில் ஆய்வு செய்து அவைகளை உடனடியாக பழுது நீக்கம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார வளாகங்கள் பராமரிப்புகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்திட வேண்டும். ஊராட்சி பகுதிகளிலும் இப்பணிகளை மேற்கொள்வதுடன் கிராமங்களின் இணைப்புச் சாலைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்து அவைகளை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்பு அலுவலர்கள் இவைகளை முழுமையாக ஆய்வு செய்து வாரம் ஒரு முறை மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விரைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு அடிப்படை தேவைகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் அல்பி ஜான் வர்க்கீஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, வருவாய் கோட்டாட்சியர்கள் (திருச்செந்தூர்) கோவிந்தராசு, (கோவில்பட்டி).விஜயா, பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர் மாகின் அபுபக்கர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.