அடிக்கடி கட் அடிக்கும் அரசு பேருந்தை சிறை பிடிக்க பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து நெல்லை சந்திப்புக்கு அரசு பேருந்து இயங்குகிறது. இந்த பேருந்து தோழம்பண்ணை விலக்கு, கொங்கராயகுறிச்சி, அரபாத் நகர், ஆறாம்பண்ணை, நடுவக்குறிச்சி, மணக்கரை, அனந்தநம்பிகுறிச்சி, கிள்ளிகுளம், வல்லநாடு வழியாக தினமும் ஐந்து முறை வந்து செல்கிறது. இந்த பேருந்தில் தான் இப்பகுதியில் உள்ள மக்கள் கல்லூரி, தாலுகா அலுவலகம், மருத்துவமனை உள்பட பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
அரசு பஸ் பாஸ் வசதியுடன் கொங்கராயகுறிச்சி, வல்லநாடு, ஸ்ரீவைகுண்டம் மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். ஆனால் இந்த பேருந்து அடிக்கடி பழுதாகிவிடுகிறது. இல்லையென்றால் பஸ் கண்டக்டர் டிரைவர் பணிக்கு வராமல் பேருந்தை நிறுத்தி விடுகிறார்கள்.
இதுகுறித்து ஆறாம்பண்ணை அரபாத்நகரை சேர்ந்த சேக் அப்துல் காதர் கூறும் போது, எங்கள் பகுதிக்கு தற்போது கருங்குளம் & கொங்கராயகுறிச்சி புதிய ஆற்று பாலம் வழியாக போக்கு வரத்து துவங்கி விட்டது. கொங்கராயகுறிச்சி & ஆறாம்பண்ணைக்கு செய்துங்கநல்லூர் வழியாக நெல்லை சந்திப்புக்கு பஸ்ஸை பாலம் வழியாக இயக்குங்கள் என கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் அரசு இது வரை செவி சாய்க்க வில்லை. இதற்கிடையில் ஏற்கனவே இந்த வழியில் ஓடிக் கொண்டிருக்கும் அரசு பேருந்தும் சரிவர இயங்குவது இல்லை. அந்த பேருந்து அடிக்கடி பழுதாகி விடுகிறது. சில வேளை பஸ் கண்டக்டர் டிரைவர் இல்லாமல் இயங்காமலேயே போய் விடுகிறது. எனவே பயணிகள் பல சிரமத்துக்குள்ளாகிறோம். இதற்கிடையில் எங்கள் கிராமத்துக்கு பாலம் வழியாக நேரடியாக அரசு பேருந்தை இயக்க வேண்டும். ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் அரசு பேருந்தை முறையாக இயக்க வேண்டும் இல்லையென்றால் பொதுமக்கள் திரட்டி அரசு பஸ்ஸை சிறை பிடிக்கும் போராட்டம் நடத்து வோம் என்றார்.
பொதுமக்கள் பிரச்சனை தீர அரசு போக்குவரத்து கழகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வெளியிட்டுள்ளனர்.