
செய்துங்கநல்லூரில் தேனி முருக பக்தர்கள் 27 வருடமாக சைக்கிள் பயணமாக திருச்செந்தூர் முருகனை தரிசிக்க கடந்தனர்.
தேனி மாவட்டம், உத்தம பாளையம் தாலூகா, அனைப்பட்டி கிராமத்தினை சேர்ந்தவர் முருகேசன்(60). இவர் தலைமையில் 165 பக்தர்கள் வருடந்தோறும் அனைப்பட்டியில் இருந்து திருச்செந்தூர் முருகன்கோயிலுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்தவருடம் 27 ஆண்டு பயணமாக கடந்த சனிக்கிழமை அனைப்பட்டியில் இருந்து கிளம்பினர். இவர்கள் முதல் நாள் வீரவாண்டியிலும், இரண்டாம் நாள் பேரையூர் அருகில் உள்ள கூகுளபுரத்திலும் தங்கினர். மூன்றாம் நாள் நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் அருகே உள்ள திருமலாபுரம் வனப்பேச்சியம்மன் கோயிலில் தங்கினர். அதன் பின் நேற்று காலை அங்கிருந்து கிளம்பி 11 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட எல்கை செய்துங்கநல்லூருக்கு வந்து சென்றனர்.
இது குறித்து குருசாமி முருகேசன் கூறும்போது, கடந்த 27 வருடமாக இந்த பயணத்தினை மேற்கொண்டு வருகிறோம். திருச்செந்தூர் முருகன் அருளாளல் எங்களுக்கு வேண்டிய அருள் கிடைப்பதால் வருடந்தோறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இன்று நாங்கள் திருச்செந்தூரில் அதிகாலை விஸ்வரூப தரிசனத்தினை முடித்து விட்டு, கொண்டு வந்த சைக்கிளை லாரியில் ஏற்றி வைத்து விட்டு பஸ்ஸில் தேனியை நோக்கி பயணம் செய்வோம் என்றார்.
வழி நெடுக இந்த சைக்கிள் யாத்திரை முருக பக்தர்களுக்கு வழியோர கிராம மக்கள் வரவேற்பு அளித்து அன்னதானம் வழங்கி வருகிறார்கள்.