திருச்செந்தூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 இளைஞர்கள் தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி, அம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் நாகராஜ் (24) இவர் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருப்பதை அவரது உறவினர் ஒருவர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் நாகராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்
ஆறுமுகநேரி அருகே உள்ள கீழ சண்முகபுரம் சேர்ந்தவர் மூக்காண்டி மகன் மாதவன் (26). இவருக்கு சரியான வேலை இல்லாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


