ஸ்ரீவைகுண்டம் அருகே திருட்டு வழக்கில் கைதானவர், கரோனா பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி, சித்திரை தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் நாகராஜன் (49). இவர் நேற்று மதியம் தனது வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் வீடு புகுந்து பீரோவை உடைத்து நகை, பணத்தை திருட முயன்றுள்ளார். சத்தம் கேட்டு எழுந்த நாகராஜன் கூச்சலிட அப்பகுதி மக்கள் சேர்ந்து அந்த மர்ம நபரை பிடித்து ஆழ்வார்திருநகரி போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துவீரப்பன் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமம், கோவில் தெருவைச் சேர்ந்த சுடலை மகன் மாயாண்டி(31) என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மாயாண்டியை போலீசார் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை பாளை மத்திய சிறையில் அடைப்பதற்காக காவலர்கள் ஜவஹர், குணசுந்தர் ஆகியோர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். சிறைக்குள் அடைக்கும் முன்னர், மாயாண்டிக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று மருத்துவ சான்றிதழ் பெற்று வருமாறு சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மாயாண்டியை மருத்துவ பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனைக்காக கைவிலங்கு அகற்றப்பட்டு இருந்த மாயாண்டி, கரோனா வார்டில் நேற்று தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதி்நது, தப்பியோடிய கைது மாயாண்டியை தேடி வருகின்றனர். கைதிகளை தப்பவிட்ட விவகாரத்தில் போலீசார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. கரோனா வார்டில் இருந்து கைதி தப்பிய சம்பவம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


