Description
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் தாமிரபரணியைப் பற்றி சரியான நாவல் இதுவரை வெளி வரவில்லை என என்னிடமும், பல பொது மேடைகளிலும் குறைப்பட்டு கொள்வார்கள். அதை நான் அடிக்கடி அசைப்போட்டுக்கொண்டே இருப்பேன். சோ. தர்மன் அய்யாவின் குரலின் எதிரொலியாகவே இந்த நாவல் உருவாகி உள்ளது. கிட்டத்தட்ட 50 வருடங்களாக தாமிரபரணி கரை பயணம் என் வாழ்வில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை சுமார் 80 நூல்களை எழுதியுள்ளேன். அனைத்துமே தாமிரபரணி கரையை யொட்டியே அமைந்திருக்கும். அங்குள்ள வரலாற்றைச் சொல்லியிருக்கும்.
ஆரம்ப காலத்தில் நான் நாவல்களை எழுதினாலும், தற்போது நாவல்கள் எழுதுவது குறைந்து விட்டது. ஆனாலும் சோ.தர்மன் அய்யா போன்ற எழுத்தாளர்கள் தரும் உற்சாகத்தினால் நாவலும் அதிகமாக எழுத துவங்கியுள்ளேன். நான் எழுதிய முத்துக்கிளி, தீதும் நன்றே, கிடாச்சிட்டு, கள்ளிக்காட்டு கள்ளவாண்டன் ஆகிய நாவல்கள் தற்போது வாசகர்கள் கவனத்தினை ஈர்த்துள்ளது.
நீர்மம் எனும் இந்த நாவலில் தாமிரபரணி நன்றாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டு, முழுவதும் சாக்கடையாகி, தன் உயிருக்கே போராடிக் கொண்டிருப்பதை காட்சிப்படுத்தியிருக்கிறேன. தாமிரபரணி அழிவை தம்பதிகள் கண்முன்னே காண்பதையும், அவர்கள் நதியைக் காப்பாற்ற பாடுபடுவதையும், கற்பனை கலந்த கதையாக எழுதியுள்ளேன்.






