Description
ஆதிச்சநல்லூரின் சிறப்புகள் என்னை பிரமிக்க வைத்தது. தொடர்ந்து நான் சேகரித்த தகவல்களை வைத்து நூல் எழுத ஆரம்பித்தேன். முதலில் தொகுப்பு நூலாகத்தான் இதை உருவாக்கினேன். ஆனால் காவ்யா பதிப்பகத்தின் உரிமையாளர் அய்யா பேராசிரியர் சண்முக சுந்தரம் அவர்களின் ஆலோசனையின் படி இதை ஆய்வு நூலாக மாற்றி விட்டோம்.
நீ.. என்ன ஆய்வாளரா… ஆய்வு நூல் எழுத ஆரம்பித்து விட்டாய் என்று கேட்பீர்கள். என்னை ஆய்வாளராக ஆக்கி விட்டது சூழ்நிலை. தினகரனுக்கு செய்தி சேகரிக்க சென்ற போதும், அதை தொடர்ந்து எந்தவொரு ஆய்வாளர்கள் ஆதிச்சநல்லூர் வந்த போதும் என்னை தொடர்பு கொண்டார்கள். நானும் அவர்களோடு ஆதிச்சநல்லூர் சென்று வருவேன்.
வசந்த் டிவி உரிமையாளர் திருமிகு வசந்தகுமார் எம்.எல்.ஏ அவர்கள் “நெல்லை மண் பேசும் சரித்திரம்” என்னும் தொலை காட்சி தொடரை உருவாக்க இயக்குனர் திரு முத்துக்குமார் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்தார்கள். அதில் நெல்லை பரமசிவன், கேமராமேன் சங்கர் ஆகியோரோடு என்னையும் ஒரு அங்கத்தினராக பணியமர்த்தினார்கள். அதில் முதல் பகுதியே ஆதிச்சநல்லூரை பற்றிதான். அதில் என்னுடைய பேட்டியையும் ஒளிபரப்பினார்கள். தொலைகாட்சியில் எனக்கு நல்லதொரு முகவரி தந்த அய்யா வசந்த குமார் எம்.எல்.ஏ அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
இது எனக்கு மேலும் ஒரு உந்துதல் சக்தியை கொடுத்தது. தொடர்ந்து பலரை சந்தித்தேன். இந்த நேரத்தில் கோவையில் செம்மொழி மாநாடு வந்தது.
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் இந்த மாநாட்டில் ஆதிச்சநல்லூர் ஆய்வுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
அதன் முன்னதாக நெல்லையில் ஆதிச்சநல்லூரை பற்றி ஒரு கருத்தரங்கு நடந்தது. இவையெல்லாம் தொடர்ந்து நான் ஆதிச்சநல்லூரை பற்றி ஆய்வு செய்ய உதவியாக இருந்தது.
இந்த நூல் எழுத எனக்கு பல அறிஞர்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்தது. பாளையங்கோட்டை வழக்கறிஞர் திரு. தீன், திரு.முல்லை முருகன், வரலாற்றுஆய்வாளர் திரு. தொ.மு.பரமசிவன், கல்வெட்டு ஆய்வாளர் திரு.கணபதி, திரு. கரிகாலன் போன்றவர்கள் எல்லாம் எனக்கு மிக்க உதவியாக இருந்தார்கள்.






