குருத்தோலையில் தாஜ்மஹால் உள்பட பல அபூர்வ பொருள்களை பனைதொழிலாளி ஒருவர் மிகச்சிறப்பாக செய்து கண்காட்சிக்கு வைத்துள்ளார்.
கருங்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி(65). இவர் பனைஏறும் தொழிலாளி. இவர் கருங்குளம் பகுதியில் பனை ஏறுவதும், மற்ற நேரங்களில் விவசாயம் செய்தும் வந்தார். இவருககு பனை ஓலையில் பல விதமாக பொருள்கள் செய்வதில் ஆர்வம். பனை நாரில் கட்டில் முடைவது, பனை ஓலையில் பாய் முடைவது, நார் பெட்டி செய்வது உள்பட தொழிலை செய்து கொண்டிருந்தார். இவர் கண்காட்சியில் வைக்கும் அளவுக்கு ஓலையில் பல விதமான பொருள்களை செய்ய ஆசைப்பட்டார். இதன் பயனாக தாஜ்மஹால், ஏரோப்பிளேன், சர்ச், ஆலய கோபுரம், வில்லு வண்டி, யானை, நார் பெட்டி, கல்லாபெட்டி, மிளகு பெட்டி, கிலுக்கு உள்பட பல பொருள்களை செய்தார். பின் அதற்கு வர்ணம் தீட்டினார். இந்த பொருள்கள் பார்பவர்களை பரவசபடுத்தியது.
இதுகுறித்து பால்பாண்டி கூறும் போது, தற்போது பனை தொழில் நசிவடைந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் பனையில் இருந்து கிடைக்கும் பொருள்கள் பயன்பாடு அதிகமாக இருந்தாலும் போலி பெருத்துக் கொண்டிருக்கிறது. பனை ஏறும் தொழிலாளர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. இதனால் பனையின் பயன்பாடு எல்லோருக்கும் தெரிய வேண்டும் இதற்காக வித்தியாசமாக முயற்சி செய்ய நினைத்தேன். பனை ஓலை மற்றும் நார் மூலமாக பொருள்களையெல்லாம் உருவாக்கி எனது வீட்டில் காட்சிக்கு வைத்துள்ளேன். விரைவில் கல்வி நிலையங்கள் உள்பட பல இடங்களுக்கு இந்த பொருள்களை கொண்டு போய் கண்காட்சியாக வைக்கலாம் என நினைக்கிறேன். அதோடு அரசு நலிந்து இருககும் இந்த தொழிலை மேலும் வலுப்படுத்த அரசு உதவிகள் செய்ய வேண்டும். இதை இந்த கண்காட்சி மூலமாக அரசுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
என்று அவர் கூறினார்.
பழைய காலங்களில் நார்பெட்டியில் கலர் ஏற்படுத்த சாயம் உருவாக்குவார்கள். ஆனால் தற்போது அந்த வசதி குறைந்து உள்ள காரணத்தினால் பெயிண்ட் அடித்து இந்த கண்காட்சியை வைத்துள்ளார். இந்த கண்காட்சி கண்போர்களை பரவசப்படுத்துகிறது.
தாஜ்மஹால் செய்வதற்கு இவர் பல ஸ்தூபிகளை அமைத்து அதன் மேலே ஓலையை கொண்டு பல வேலைபாடுகளை செய்துள்ளார். பளிங்கு மாளிகை என்பதை குறிககும் வண்ணத்தில் இதற்கு வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தாஜ்மஹால் சுமார் 3 அடி உயரத்தில் மிக பிரமாண்டமாக காணப்படுகிறது.