கருங்குளம் அருகே ரயில் சுரங்க பாதையால் தீவான கிராமம். பெண்கள் ரயில் மறியல் செய்ய முயற்சி செய்த காரணத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.
கருங்குளம் அருகே உள்ள கிளாக்குளம். இந்த கிராமத்தில் கிளாக்குளம், குருக்கல் கோட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊரில் சுமார் 300 வீடுகள் உள்ளன. இவ்வூரில் மினிபஸ் ஒன்று இயங்கி வருகிறது. மேலும் இந்த ஊர் வழியே உள்ள சாலை வழியாக வல்லகுளம், கால்வாய், திருவரங்கப்பட்டி, அரசர்குளம், இராமனுஜம்புதூர் உள்பட பல ஊருக்கு சென்று வரலாம். இவ்வூருக்கு செல்லும் வழியில் ரயில்வே கிராஸ் உள்ளது. கடந்த டிசம்பர் 2012ல் புனிதா என்ற இவ்வூரை சேர்ந்த பள்ளி மாணவி பள்ளிக்கு செல்லும் போது கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு இவ்வூரில் உள்ள ஆளில்லா ரயில்வேகேட்டை ஆள் உள்ள ரயில்வேகேட்டாக மாற்றினர். ஆனால் இ ரண்டு மாத காலத்தில் அதை கை விட்டுவிட்டு, அவ்விடத்தில் சுரங்க பாதை அமைக்க நடவடிக்கை எடுத்தனர். இந்த சுரங்க பாதை வேலை கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. கடந்த ஆண்டு வேலை முடிக்கப்பட்டும் கூட இந்த சுரங்க பாதையில் வந்த ஊற்றை நிறுத்த முடியவில்லை. இதனால் இந்த வழியாக வந்த மினி பஸ் நிறுத்தப்பட்டது. மழை வருவதற்கு முன்பு வரை அருகில் உள்ள முறுக்கன் ஓடை பாலம் வழியாக ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வந்தன. ஆனாலும் மழை பெய்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தெற்குகாரசேரியை சுற்றி சுமார் 12 கிலோ மீட்டர் பயணித்தே கருங்குளத்தினை அடைய முடிந்தது. இதற்கிடையில் இவ்வூருக்கு தாதன்குளம் ஆர்.வி.எஸ் தோட்டத்தில் இருந்த மங்கம்மாள் சாலை ஒன்று பழைய வரைபடம் மூலம் இருந்தது. இந்த சாலையை பாரத பிரதமர் மேம்பாடு திட்டத்தின் கீழ் சுமார் 5 லட்சம் செலவில் புதிய சாலையாக அமைக்க கருங்குளம் ஒன்றிய அலுவலகம் நடவடிக்கை எடுத்தது. அந்த பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் பொதுமக்கள் சிரமாகாவே பயணம் செய்து வந்தனர்.
தற்போது பெய்தமழையின் காரணமாக சுரங்க பாதையில் நீர் பெருகி விட்டது. இதனால் மக்கள் வெளியே வரமுடியவில்லை. கிராமம் தீவாவ மாறிவிட்டது. சுமார் 12 கிலோ மீட்டர் சுற்றி வல்லகுளம், தெற்கு காரசேரி வழியாக கருங்குளம் வரும் அவல நிலை ஏற்பட்டது. இதனால் பாதிப்படைந்த மக்கள் (31.10.2019) காலை 10 மணிக்கு சுமார் 75 பெண்கள் உள்பட 100 பேர் கொட்டும் மழையில் கொடை பிடித்த படி போராட்ட நடத்த வந்தனர். சுரங்கபாதையில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தில் நின்று போராட்டம் நடத்தினர். அதன் பின் தாதன்குளம் ரயிலை நிலையத்தில் திருச்செந்தூர் செல்லும் ரயிலை மறிக்க முயற்சி செய்தனர். அதற்கு ரயில் தாதன்குளம் ரயில் நிலையத்தினை கடந்து விட்டது. தொடர்ந்து கருங்குளம், மூலைக்கரைப்பட்டி சாலையில் மறியல் செய்ய முயன்றனர். அப்போது அங்கு வந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஜ் குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பின் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் சிவராஜன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இடையில் விடப்பட்ட மங்கம்மாள் சாலையை விரைவில் அமைத்திடவும், சுரங்க பாதையில் தண்ணீரை அகற்றி போக்குவரத்தினை சீர்செய்து தரவும் நடவடிக்கை எடுக்க உறுதியளித்தனர்.
அதன்பின் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் இவ்வூருக்கு மேற்புறம் உள்ள கிளாக்குளம் குளத்தில் பொதுப்பணித்துறை மூலமாக போடப்பட்ட தடுப்பு சுவர் உடைந்து விழுந்த காரணத்தினால் குளம் உடைந்து தண்ணீர் ஊருக்குள் வரும் அவல நிலை ஏற்பட்டது. அதை சாக்கு மூட்டை வைத்து அடைக்க கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் சிவராஜன் நடவடிக்கை எடுத்துள்ளார். தொடர்ந்து மழை பெய்து கிராமத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வருவாய் துறை, கருங்குளம் ஒன்றிய அலுவலகம், காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.