தமிழ்நாடு தென்மாவட்ட மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில் அதன் தலைவர் தங்கராஜ் கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினருக்கு மனு ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது.
உங்கள் முயற்சியால் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவெங்கடேஸ்வரா பஞ்சாயத்து (பேய்குளம்) முன்மாதிரி கிராமமாக உருமாறி விட்டது. அதற்கு மிகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அம்மா எங்கள் ஊரில் பாதிக்கப்பட்ட சிறுமி புனிதாவுக்காக பல்வேறு உதவிகளை செய்தீர்கள். அதன் பயனாக நெல்லை&திருச்செந்தூர் ரயில்வே கிராஸில் சுரங்க பாதை அமைக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக அதில் தோன்றிய ஊற்று தற்போது எங்கள் கிராமத்தினை துண்டிக்க வைத்து விட்டது. தற்போது எங்கள் கிராமம் தீவு போல மாறி விட்டது.
எங்கள் ஊருக்கு மங்கம்மாள் சாலை ஒன்று உண்டு. அந்த சாலை தூர்ந்து விட்டது. புதிதாக அமைக்கப்பட்ட சுரங்க பாதை எப்போதுமே தண்ணீர் தேங்கி நிற்பதால் அதன் வழியாகவும் செல்ல முடியவில்லை . எனவே 10 கிலோ மீட்டர் சுற்றி தெற்குகாரசேரி, வல்லகுளம் வழியாகத்தான் வரவேண்டியது உள்ளது. மங்கம்மாள் சாலை 2 கிலோ மீட்டர் தூரம் அந்த சாலை சீர்செய்யப்பட்டால் எங்கள் கிராமத்துக்கு போக்குவரத்து வசதி கிடைத்து விடும் எனவே தாங்கள் தங்கள் ஒதுக்கீடு மூலமாக எங்கள் ஊருக்கு அந்த சாலையை அமைத்து தரும் படி கேட்டுக்கொள்கிறேன்.
என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக கிளாக்குளத்தில் உள்ள அனைத்து மக்களிடமும் கையெழுத்து வாங்கி கனி மொழி எம்பிக்கு அனுப்பியுள்ளனர்.