தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.
கோவிலில் இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழா இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடந்தது. திருவிழாவை முன்னிட்டு நேற்று மதியம் கோவிலுக்கு சங்குமுக தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு 1-ம் திருவிழா முதல் 9-ம் திருவிழா வரையிலும் தினமும் காலை, இரவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தை அமாவாசை திருவிழா 10-ம் திருநாளான வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று மதியம் 1 மணிக்கு சுவாமி உருகுபலகை தரிசனம், அபிஷேகம், மாலை 4 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சி, இரவு 10 மணிக்கு கற்பக பொன்சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது. 11-ம் திருநாளான 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி கோவில் மூலஸ்தானம் சேரும் ஆனந்தகாட்சி நடக்கிறது.
விழாவின் நிறைவு நாளான 6-ந்தேதி (புதன்கிழமை) காலையில் தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடல், மதியம் அன்னதானம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவில் ஆலிலை சயனம், மங்கள தரிசனம் நடக்கிறது.