உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் 144 தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை வருகின்ற 17ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் மற்றும் தமிழர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சின்னார்குளத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அபுதாபிக்கு பணிக்குச் சென்றுள்ளார்.
ஆனால் அங்கும் தற்போது கொரோனா தாக்கம் உள்ளதால் மூன்று மாத பணி முடிந்து சொந்த நாட்டிற்கு திரும்ப இயலாத சூழ்நிலை உள்ளது.
இதுகுறித்து நமது செய்தியாளருக்கு பாஸ்கர் என்பவர் பிரத்யேகமான ஒரு வீடியோவை அனுப்பியுள்ளார்.
அதில் நாங்கள் தமிழகத்தைச் சேர்ந்த 1000 பேர் கடந்த ஜனவரி மாதம் மூன்று மாத காலத்திற்கு வேலைக்காக அபுதாபிக்கு வந்தோம். தற்போது பணி முடிந்து 2 மாத காலம் ஆன நிலையில் தற்போது வேலை இன்றி தவித்து வருகிறோம். எங்களின் குடும்பம் எங்களை நினைத்து தவித்து வருகின்றனர். நாங்கள் வந்த விசா காலமும் முடிந்து விட்டது. எனவே தமிழக அரசு எங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் அனைவருக்கும் கோரானா பரிசோதனை செய்யப்பட்டு, எந்தவித பாதிப்பும் இல்லை என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எங்களின் பயணச்செலவை நாங்கள் பணியாற்றி வந்த கம்பெனியை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது. என அந்த வீடியோவில் தெரிவித்து உள்ளார்கள்.
எனவே மத்திய மாநில அரசுகள் தமிழர்களை அபுதாபியில் இருந்து மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


