பல நூறு ஆண்டுகள் பழமையான வேளாக்குறிச்சி ஆதீனத்தின் 17-ஆவது குருமகா சந்நிதானமாக இருந்து, அருளாட்சி செய்தவர் திருப்பெருந்திரு அஜபா நடேஸ்வர பண்டார சந்நிதி சாமிகள் ஆவார். இவர்களுடைய அருளாட்சிக் காலம் வேளாக்குறிச்சி ஆதீனத்தின் பொற்காலமாகும்.
கை நழுவிப் போன ஆதீன உரிமை, கோயில் கட்டளைகள், திருக்கோயிலை நிர்வகிக்க வேண்டிய நஞ்சை, புஞ்சை நிலங்கள், ஆதீன நிர்வாகத்திற்கு வாரிசுரிமை அடிப்படையில் மூத்தவருக்கே பட்டம், இப்படி அனைத்துமான உரிமைகளையும் நீதிமன்ற உத்தரவுகளால் பெற்றுத் தந்தவர். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், வேளாக்குறிச்சி ஆதீனத்தின் நிர்வாகம் செம்மாந்து நிற்பதற்கு நீதிமன்றத்தின் நெடிய தீர்ப்புகளைப் பெற்று வரலாற்றில் பொன்னெனப் பதிந்தவர்.
இவர்கள் அருளாட்சிக் காலத்தில் திருப்புகலூர் ஆதீனத் தலைமை மடத்திலும், நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஆதி மடத்திலும் மாறி மாறி விழாக்கள், கொடைகள் என நடத்தி வேளாக்குறிச்சி ஆதீனத் திருமடத்தை விழாக்கோலம் பூணச் செய்திருக்கிறார்கள். அருளாட்சியிலும், நிர்வாகத் திறனிலும், வடமொழி – தாய்த்தமிழ் மொழிப் புலமையிலும் தேர்ந்து, உரைவீச்சில் சிறந்து 1953-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை 53 ஆண்டுகள் வேளாக்குறிச்சி ஆதீனத் தலைமையேற்று ஆட்சி செய்தார்கள்.

அத்தகைய பெரும் பெருமைக்குரிய வேளாக்குறிச்சி ஆதீனம் 17-ஆவது குருமகா சந்நிதானம் அவர்களின் நூற்றாண்டு (1926 – 2026) விழாவின் முதல் நிகழ்வாக வேளாக்குறிச்சி ஆதீனம் தோன்றிய கல்லிடைக்குறிச்சியில், தாமிரபரணி ஆற்றின் கன்னடியன் வாய்க்கால் கரையில் உள்ள பூசை மடத்தில் (21.11.2026) சனிக்கிழமை அதிகாலை முதல் தற்போதைய 18-ஆவது குருமகா சந்நிதானம் திருப்பெருந்திரு சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சாமிகள் தலைமையில், ஆதீன இளவரசு சாமிகள் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜபா நடேசுவர சாமிகள் ஒருங்கிணைப்பில் ஆத்ம வழிபாட்டுடன் மிகச்சிறப்பாக நடந்தது. காலை முதல் மாலை வரை தேவாரம், திருவாசகம் முற்றோதல், அன்னதானம் எனக் கல்லிடைக்குறிச்சி ஆதிமடம் களைகட்டியது.
நூற்றாண்டு விழாவின் முக்கிய நிகழ்வாக மாலையில் ஆதீனத் திருமடத்தில் உரையரங்கம் துவங்கியது. புதுவை மாநிலத்தின் அரசுச் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அய்யா எஸ்.டி. சுந்தரேசன், அம்பாசமுத்திரம் மூத்த வழக்கறிஞர் அய்யா ஆர். செல்வராஜ், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அய்யா மு. செல்லையா, அய்யா சிவத்திரு. ஆர். செல்வம் பட்டர், சங்கர்நகர் ஸ்ரீ ஜெயேந்திரர் பொன்விழா மேல்நிலைப் பள்ளியின் தலைவர் அம்மா உஷா ராமன், தாமிரபரணி அன்பு நண்பர் மணவை தமிழ் மாணிக்கம், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சித் தலைவர் சகோதரி பார்வதி, பேரூராட்சி துணைத் தலைவர் சகோதரர் கே. இசக்கிப்பாண்டியன் ஆகியோரைத் தொடர்ந்து, நானும் போற்றுதலுக்குரிய உரை நிகழ்த்தினோம்.
இதனையடுத்து வேளாக்குறிச்சி குருமகா சந்நிதானம் அவர்கள் பதினெட்டு சைவ ஆதீனங்களின் சிறப்பு, சமயக்குரவர் நால்வரில் இருவர் இல்லறத்தார்; அந்த வழியில் ஆதீனங்கள் பதினெட்டில் வம்சவழி ஆதீனங்கள் எட்டு; பல நூறு ஆண்டுகளாக வேளாக்குறிச்சி ஆதீனம் செய்து வரும் அரும்பெரும் தொண்டு இவற்றையெல்லாம் விளக்கிப் பேசி அருளுரை தந்தார்கள்.
மேலும், நூற்றாண்டு விழா நினைவு அறக்கட்டளை நிறுவப்பெற்று 17-வது குருமகாசந்நிதானம் கல்வி பயின்ற, கல்லிடைக்குறிச்சி ஏகாம்பரபுரம் தெருவில் உள்ள லலிதாம்பிகை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ரூ. 25,000/- கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும்; திருக்குறள் மற்றும் தேவாரம், திருவாசகம் பேச்சுப்போட்டி நடத்தி மாணவர்களுக்கு இந்த நிதியில் பரிசும், பணமுடிப்பும் வழங்கிடுவோம் என 18-ஆவது குருமகாசந்நிதானம் அறிவித்தது பெருமைக்குரியது.
நிறைவாக 17-ஆவது குருமகா சந்நிதானங்களின் நூற்றாண்டு விழா மலரினை வெளியிட்டு, திருக்கயிலாயப் பரம்பரை செங்கோல் ஆதீனம் 103-ஆவது குருமகா சந்நிதானம் திருப்பெருந்திரு சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பரமாச்சாரியார் சாமிகள் அவர்கள் உரையாற்றும் போது வேளாக்குறிச்சி ஆதீனம் 17-ஆவது குருமகா சந்நிதானங்களின் அருளாட்சிச் சிறப்பினை வெகுவாக எடுத்துரைத்தார். அந்த வழியில் தற்போதைய குருமகா சந்நிதானம் அவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற அரும் பண்பைச் சிலாகித்து, திருமுறைப் பாடல்கள் – விளக்கங்கள் என அரும்பெரும் உரையாற்றி நிறைவு செய்தார்கள்.
விழாக்குழுவின் தலைவரும், ஆதீன இளவரசுமான அஜபா நடேசுவர சாமிகள் அவர்கள் நிகழ்வை, மிக அழகாக ஒவ்வொருவரின் சிறப்பையும் பாராட்டி, அறிமுகம் செய்து வைத்துப் பேசி நிறைவு செய்தார்கள். ஆதீனத்தின் பவர் ஏஜெண்ட் வே. பிச்சையா நன்றி கூற நூற்றாண்டு விழாவின் முதல் நிகழ்வு கல்லிடைக்குறிச்சியில் நிறைவு பெற்றது.
இதனையடுத்து நாகை மாவட்டம், திருப்புகலூரில் வேளாக்குறிச்சி ஆதீனத்தின் தலைமை மடத்தில் டிசம்பர் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்களும் மாநாடு போல நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பேசிய அனைவரும் என்னையும் பாராட்டிப் பேசினார்கள். எனக்கும் மேடையில் இருந்தோருக்குமான உறவையும், வேளாக்குறிச்சி ஆதீனத்தினால் நான் அடைந்த பெருமை மற்றும் விருதுகளையும் பட்டியலிட்டுப் பேசினேன். நிறைவான விழா. என்னோடு பயணித்த பாண்டிச்சேரி முன்னாள் செயலர் சுந்தரேசன் அய்யா அவர்களுக்கும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு தந்த சந்நிதானத்துக்கும் எனது நன்றி.
தொன்மைப் பழமை வாய்ந்த பதினெட்டு சைவத் திருமடங்களின் வரிசையில், சைவமும் – தமிழும் தழைத்தோங்கிடச் செய்திடும் வேளாக்குறிச்சி ஆதீனம் நடத்துகின்ற நூற்றாண்டு விழாக்களில், நாம் அனைவரும் திருப்புகலூரில் சங்கமிப்போம் வாரீர்…!


