திருநெல்வேலி ‘புதிய தலைமுறை’ மண்டல நிருபர் திரு. மருதுபாண்டியன் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டபோது, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சிகரமான தகவலைக் அளித்துள்ளது. குறிப்பாகத் தாமிரபரணி ஆற்றில் மலக்குடல் கோலிபார்ம் (Fecal Coliform) கிருமிகள் 8.6 மடங்கு அதிகரித்துள்ளன. அம்பாசமுத்திரத்தில் 13.7 ஆக இருந்த அளவு, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகப் பாலம் அருகே 117.4 மி.லீ. ஆக உயர்ந்துள்ளது. ஆற்றில் ஆய்வு செய்யப்பட்ட 9 இடங்களில் 7 இடங்களில் மொத்த கோலிபார்ம் அளவு, ‘வகுப்பு ஏ’ குடிநீர் ஆதாரத்துக்கான 50 மி.லீ. வரம்பைத் தாண்டியுள்ளது. ராமையன்பட்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் நீரில் மலக்குடல் கோலிபார்ம் அளவு 836 மி.லீ. ஆக உயர்ந்துள்ளது; இதன் நிர்ணயிக்கப்பட்ட அளவு 230 ஆகும். மாநகராட்சியின் 14 பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் 2 மையங்களில் மட்டுமே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிந்துபூந்துறை DEWATS (டிவாட்ஸ்) அலகைக் கடந்து செல்லும் போது வெளியேறும் நீரின் பி.ஓ.டி (BOD) அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிந்துபூந்துறை பகுதியில் பி.ஓ.டி அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட 8 மடங்கு அதிகமாக இருப்பதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இது குறித்து ‘புதிய தலைமுறை’ விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டது. இதற்கிடையில் ‘தினமலர்’ டிவியில் ‘உரைகல்’ நிகழ்ச்சியில் நானும் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் திரு. முத்துராமன் ஐயா அவர்களும் பேசிய உரையாடல் ஒளிபரப்பானது.
இதையொட்டி, “தாமிரபரணியை அசுத்தப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும் சுமார் ரூ.2,000 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாபநாசம் பகுதியில் துணி மற்றும் மண்பாண்டக் கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுவதைத் தடுக்க 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
ஆற்றில் வாகனங்களைக் கழுவுவதற்கு அனுமதியில்லை. பொதுமக்கள் குப்பைகள் மற்றும் கழிவுகளை ஆற்றில் கொட்டாமல் குப்பைத் தொட்டிகளில் முறையாகச் சேர்த்து, தாமிரபரணியைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஆற்றை அசுத்தப்படுத்தும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுபோன்று நல்ல காரியங்கள் நடக்க வேண்டும்; அதற்குப் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். விரைவில் தாமிரபரணி நலம் பெற வேண்டும்.
முத்தாலங்குறிச்சி காமராசு


