ஆவின் பால் பொருட்கள் தட்டுப்பாடின்றி, நியாயமான விலையில் கிடைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆவின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தட்டுப்பாடின்றி, நியாயமான விலையில் கிடைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பின் செயல் இயக்குநர் ஆ.சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் பல நகரங்கள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் ஆவின் பால் பாக்கெட்டுகள் போதிய அளவில் கிடைக்காததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அத்தியாவசியப் பொருளான பாலை வாங்குவதற்கே மக்கள் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்கள் நெருங்கி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் தேவைக்கேற்ப பால் இருப்பையும் சீரான விநியோகத்தையும் அரசு உறுதி செய்ய வேண்டும். தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு கூடுதல் பால் அனுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆவின் நிறுவனம் தயாரித்து வந்த 170-க்கும் மேற்பட்ட பால் சார்ந்த பொருட்களில் சில தற்போது விற்பனைக்குக் கிடைப்பதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தைச் சீரமைத்து, நுகர்வோரின் தேவைக்கேற்ப அனைத்து பகுதிகளிலும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் ஏற்கெனவே பொருளாதாரச் சுமையைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில், ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு அவர்களை மேலும் பாதிக்கும். எனவே, விலை உயர்வைக் கைவிட்டு, பொதுமக்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ற நியாயமான விலையில் பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
பால் தட்டுப்பாட்டை உடனடியாகப் போக்குதல், அனைத்து விற்பனை நிலையங்களிலும் போதிய இருப்பைப் பராமரித்தல், நிறுத்தப்பட்ட பொருட்களின் விற்பனையை மீண்டும் தொடங்குதல், விலை உயர்வைக் கைவிடுதல் ஆகியவற்றுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஆவின் நிறுவனம் பொதுமக்களின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுவதுடன், பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தையும் நுகர்வோரின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும் எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பின் செயல் இயக்குநர் ஆ.சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.


