தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், வருகிற நவம்பர் 2-ஆம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று தொழுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் மற்றும் தொழுநோய் கண்டறியும் முகாம் நடத்துவது தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் இரு கட்டங்களாகத் தலா 14 நாட்கள் வீடு வீடாகச் சென்று தொழுநோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முதல் கட்ட முகாம் நவம்பர் 2-ஆம் தேதி முதல் 14 நாட்கள் நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் 14 நாட்கள் நடைபெறும்.

முகாமின் போது, பொதுமக்களிடம் தொழுநோயின் அறிகுறிகள் குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், அறிகுறிகள் இருப்பதாகக் கண்டறியப்படும் நபர்களுக்கு உடனடியாக உரிய மருத்துவப் பரிசோதனைகள் செய்து, தேவையான சிகிச்சைகளைத் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் சுகாதார மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் தொழுநோய் துணை இயக்குநர் யமுனா, காசநோய் துணை இயக்குநர் சுந்தரலிங்கம், தூத்துக்குடி மாநகராட்சி நகர் நல அலுவலர் எஸ்.ஆர். கணேஷ், சுகாதார அலுவலர் வித்யா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.