குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்குக் கடற்கரையில் நடைபெறுகிறது.
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்குக் கடற்கரையில் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் குவிந்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் திருக்கோவிலில் இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கித் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருவிழாவையொட்டி மாலை அணிந்து விரதமிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் காளி, முருகன், சிவன் மற்றும் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து வருகின்றனர்.
விழாவின் 7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோலத்தில் அம்மனைத் தரிசித்தால் வீடுபேறு கிடைக்கும் என்பது ஐதீகமாகும். 8-ம் திருநாளான நேற்று காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு 10 மணிக்கு அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் திருவீதி உலா வந்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்குச் சிதம்பரேஸ்வரர் கடற்கரை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து புதன்கிழமை (அக். 21) அதிகாலை 1 மணிக்குக் கடற்கரை மேடையில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், அதிகாலை 2 மணிக்குச் சிதம்பரேஸ்வரர் கோவிலில் சாந்தாபிஷேகமும் நடைபெறுகின்றன. அதிகாலை 3 மணிக்கு அம்மன் திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சியும், காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு பக்தர்கள் காப்பு களையும் நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்குச் சேர்க்கை அபிஷேகமும் நடைபெறவுள்ளன.
வரும் 22-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குச் சிறப்புப் பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் விழா நிறைவடைகிறது. சூரசம்ஹாரத்தைக் காண்பதற்காகத் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் குவிந்து வருவதால் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.


