தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு காளி வேடமணிந்த பக்தர்களின் பிரம்மாண்ட ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு ருத்ர தர்ம சேவா அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் காளி வேடமணிந்த பக்தர்களின் ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா விழாவை முன்னிட்டு, பல்வேறு தசரா குழுக்களைச் சேர்ந்த பக்தர்கள் காளி வேடமணிந்து இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். பல வண்ணமயமான மற்றும் உக்கிரமான காளி வேடங்களில் பக்தர்கள் வீதிகளில் அணிவகுத்துச் சென்றது காண்போரைக் கவர்ந்தது. இந்நிகழ்ச்சிக்கு ருத்ர தர்ம சேவா அமைப்பின் நிறுவனர் தா. வசந்தகுமார் தலைமை தாங்கினார்.

தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் கோவில் முன்பிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், பாளையங்கோட்டை சாலை, வி.வி.டி சந்திப்பு, காய்கறி மார்க்கெட் சந்திப்பு, பழைய பேருந்து நிலையம் மற்றும் குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சிவன் கோவில் முன்பாக நிறைவடைந்தது.இந்த ஊர்வலத்தில் தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஊர்வலத்தின் முடிவில் சிறப்பாகக் காளி வேடமணிந்து வந்த பக்தர்களுக்கு அமைப்பின் சார்பில் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதற்கான முழு ஏற்பாடுகளையும் ருத்ர தர்ம சேவா நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.


