தூத்துக்குடி அருகே 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த நாய்க்குட்டியை, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சிலோன் காலனி இந்திரா நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் 100 அடி ஆழமான ராட்சத கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில், அந்த கிணற்றில் நாய்க்குட்டி ஒன்று தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.
இதுகுறித்து உடனடியாக ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் ஓட்டப்பிடாரம் தீயணைப்புத் துறை அலுவலர் புன்னவனகட்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாய்க்குட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர் கொம்பு மகாராஜா என்பவர் தனது உடலில் கயிற்றைக் கட்டி கிணற்றுக்குள் இறங்கினார். பின்னர் வலை மூலம் கிணற்றில் தவித்த நாய்க்குட்டியைப் பத்திரமாக உயிருடன் மீட்டு வெளியே கொண்டுவந்தனர். ஆபத்தான முறையில் போராடிய நாய்க்குட்டியை துணிச்சலாக மீட்ட தீயணைப்புத் துறை வீரர்களுக்கு அப்பகுதி கிராம மக்கள் தங்களது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.


