தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் UK அரசின் UK PACT நிதியுதவியுடன் PACT-Digi-PULSE திட்டத்தின் கீழ் பருவநிலை ஒருங்கிணைந்த நகர்ப்புற போக்குவரத்து திட்டமிடல் கலந்துரையாடல் கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

தூத்துக்குடி வேகமான தொழில் நகரமாக வளர்வதால், நடைபாதை வசதிகள், பேருந்து நிறுத்தங்களைச் சீரமைத்தல் மற்றும் மாநகராட்சி பட்ஜெட்டில் ‘பருவநிலை குறியீடு’ கொண்டு வருவது அவசியம் என மாநகராட்சி ஆணையர் எஸ். பிரியங்கா தெரிவித்தார்.

பசுமையாக்கம், பூங்காக்கள் மேம்பாடு மற்றும் மின்கம்பிகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் வாகன நிறுத்தங்களை முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

நிகழ்வில் பசுமை இல்ல வாயு உமிழ்வு பட்டியல், ஆரோக்கியமான தெருக்கள் கொள்கை உள்ளிட்ட 4 முக்கிய ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டன. இக்கூட்டத்தில் பெறப்பட்ட பரிந்துரைகள் தூத்துக்குடியை எதிர்காலப் பருவநிலைக்கு ஏற்ற பசுமை நகரமாக மாற்ற உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.