தூத்துக்குடியில் மூத்த குடிமக்களுக்கான டிஜிட்டல் மற்றும் நிதிசார் கல்விப் பயிற்சி மற்றும் முதியோர் நல மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலர் முனைவர் செல்வி பிரேமலதா அவர்களின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி நிகிலேசன் நகர் சூர் பவுண்டேஷன் அன்பு சோலை பகல்நேர முதியோர் பராமரிப்பு மையத்தில், மூத்த குடிமக்களுக்கான டிஜிட்டல் மற்றும் நிதிசார் கல்வித் திறன் பயிற்சி மற்றும் முதியோர் நல மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. விநாயகமூர்த்தி அவர்கள், மூத்த குடிமக்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் பல்வேறு சேவைகள், டிஜிட்டல் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும் முறைகள், இணையவழிப் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் ஏ.டி.எம். பயன்பாடு குறித்து விளக்கினார். மேலும், பாதுகாப்பான வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வழிமுறைகள், இணையவழி நிதி மோசடிகளைத் தவிர்க்கும் முறைகள் மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவைகளின் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
முன்னோடி வங்கியின் நிதிக் கல்வியறிவு நிபுணர் திரு. மணிகண்ட வாசகம் அவர்கள், டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் நன்மைகள், அவற்றைப் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வை மூத்த குடிமக்களுக்கு வழங்கினார்.
மேலும், பிசியோதெரபிஸ்ட் டாக்டர் மரிய ஜீடி ஜீவானிற்றா அவர்கள், மூத்த குடிமக்கள் தங்களது உடல்நலத்தைப் பேணுவதற்கான எளிய உடற்பயிற்சிகள், உடல் இயக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியமான முதுமை வாழ்விற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் நிவேதிதா, சூர் பவுண்டேஷன் மைய நிர்வாகி பிரான்ஸ் மற்றும் நிதிக் கல்வியறிவு நிபுணர் ஜெயலட்சுமி மற்றும் பாலின நிபுணர் முருகப்பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்முகாமின் மூலம் மூத்த குடிமக்களுக்கு வங்கிச் சேவைகள், டிஜிட்டல் வங்கிச் சேவைகள், பாதுகாப்பான இணையவழிப் பணப் பரிவர்த்தனைகள், நிதிப் பாதுகாப்பு, உடல்நலப் பராமரிப்பு, அரசு நலத்திட்டங்கள் மற்றும் மருத்துவச் சேவைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


