.

செயற்கரிய செய்த பெரியார் ஆதித்தனார். யாருமே செய்யாத அரிய செயல்களை அவர் செய்திருக்கிறார். சுமார் 84 ஆண்டுகளுக்கு முன்பு தமிழனுக்கு என்று ஒரு பத்திரிகை கிடையாது.
ஒரு சிலர் தொடங்கிய பத்திரிகைகளும் தலைதூக்க முடியாமல் ஒழிந்துபோயின. ஆதித்தனார் ‘தந்தி’ தொடங்கினார். அது மளமளவென்று வளர்ந்தது. எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு வளர்ந்தது. நன்றாகவே வேரூன்றிவிட்டது. “நாமும் பத்திரிகை நடத்தலாம்” என்ற துணிச்சலை மற்றவர்களுக்குக் கொடுத்தவர் ஆதித்தனார்தான். அதனால்தான் ஆதித்தனாரை ‘செயற்கரிய செய்த பெரியார்’ என்று கூறுவார்கள்.
கடந்த 84 ஆண்டு காலத்தில் தமிழ் மக்களுடன் ‘தினத்தந்தி’ இரண்டறக் கலந்துவிட்டது. காலையில் கண்விழித்ததும் சுவையான காப்பியும், சூடான ‘தினத்தந்தி’யும் இல்லாமல் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கை தொடங்குவது இல்லை.
“காணாமல் போன குழந்தை ‘தினத்தந்தி’யின் உதவியால்தான் கிடைத்தது” என்று எத்தனையோ பெற்றோர் மகிழ்ச்சியடைகிறார்கள்.
“தினத்தந்தி”யின் உதவியால்தான் திருடனைப் பிடிக்க முடிந்தது; செத்தவர்களை அடையாளம் காண முடிந்தது என்று போலீஸ் அதிகாரிகள் பாராட்டுகிறார்கள். மக்களின் குறைகளை அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டுவந்து தீர்த்து வைக்கிறது.
தமிழ் நாளிதழ்களில் அதிகம் விற்பனையாவது ‘தினத்தந்தி’யே. இந்தச் சிறப்பு இன்று ஏற்பட்டது அல்ல; கடந்த 65 ஆண்டுகாலமாக இந்தச் சிறப்புடன் தினத்தந்தி விளங்குகிறது.
தமிழ் நாளிதழ்களில் அதிக விற்பனையுள்ளது என்ற பெருமையை 1961-ல் ‘தினத்தந்தி’ எட்டிப்பிடித்தது. அன்று முதல் இன்றும் (2026) அந்தச் சிறப்புடன் ‘தினத்தந்தி’ திகழ்கிறது. தொடர்ந்து 65 ஆண்டு காலமாக இப்படிச் சிறப்புடன் விளங்குவதும் ஒரு சாதனையே.
ஆதித்தனார் காலத்திலேயே அவருடைய மகன் பா. சிவந்தி ஆதித்தன் 1959-ம் ஆண்டில் ‘தினத்தந்தி’யின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
1942-ல் மதுரையில் தொடங்கப்பட்ட ‘தினத்தந்தி’ அரை நூற்றாண்டு காலத்தில் அருகு போல் வேரூன்றி, ஆல் போலத் தழைத்து விழுதுகள் விட்டு, இன்று ஒரே நேரத்தில் 17 ஊர்களில் அச்சாகிறது.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சை, திண்டுக்கல், திருப்பூர், புதுச்சேரி, பெங்களூரு, மும்பை, துபாய் ஆகிய 17 ஊர்களில் இருந்து நாள்தோறும் காலையில் அச்சாகி ‘தினத்தந்தி’ வெளிவருகிறது. இந்தச் சாதனை, தமிழும் தமிழ் மக்களும் பெருமைப்படக்கூடியது அல்லவா?
இப்படிச் சாதனை மேல் சாதனை புரிந்துவரும் “தினத்தந்தி”, கடந்த 75 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத எத்தனையோ சுவடுகளைப் பதித்திருக்கிறது.
“தினத்தந்தி” இல்லாமல் தமிழ்நாட்டின் கடந்த முக்கால் நூற்றாண்டு கால வரலாறு இல்லை. அந்த அளவுக்குத் தமிழ் மக்களுடன் – தமிழ்நாட்டுடன் – தமிழ் மொழியுடன் – தமிழ் மக்களின் போராட்டங்கள், மொழி வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, கலை-பண்பாட்டு வளர்ச்சி, தொழில் வளர்ச்சி என்று எல்லாத் துறைகளிலும் உறுதுணையாக இருந்தது தினத்தந்தி. அதுமட்டுமல்ல; தினத்தந்தியே ஒரு வரலாறாகவும் ஆகிவிட்டது.
1942-ம் ஆண்டில் “தினத்தந்தி”யைப் பெரிய ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்கள் தொடங்கினார்கள். 1959-ம் ஆண்டில், “தினத்தந்தி”யின் நிர்வாகப் பொறுப்பைச் சின்ன ஐயா டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
நிர்வாகப் பொறுப்பை ஏற்றது பற்றி, ஒரு கட்டுரையில் சின்ன ஐயா அவர்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டு இருக்கிறார்கள்:
“1959 மே 2-ந்தேதி, தினத்தந்தியின் நிர்வாகப் பொறுப்புகளை என் தந்தையார் என்னிடம் ஒப்படைத்தார்கள். ஒப்படைப்பதற்கு முன், எனக்குப் பத்திரிகைத் துறையில் ஆர்வம் உள்ளதா என்பதைக் கண்டறிய பல சோதனைகளை நடத்தினார்கள்.
“பத்திரிகை நடத்துவது என்பது நெருப்பு ஆற்றைக் கடப்பது போன்றது” என்று என் தந்தையார் அடிக்கடி கூறுவார்கள். அந்த நெருப்பாற்றைக் கடக்கக்கூடிய ஆற்றல் எனக்கு இருக்கிறதா என்பதைக் கண்டறிய அவர்கள் விரும்பியதில் வியப்பில்லை.
நான் “பி.ஏ” பட்டப்படிப்பு முடித்ததும், ஐயா என்னை அழைத்தார்கள். பத்திரிகைத் துறையில் என்னென்ன பகுதிகள் – பிரிவுகள் உண்டோ, அத்தனை துறைகளிலும் எனக்குப் பயிற்சி அளித்தார்கள். அச்சுக் கோப்பாளராக, அச்சிடுகிறவராக, “பார்சல்” கட்டி அனுப்புகிறவராக, நிருபராக, துணை ஆசிரியராக – இப்படி எல்லாத் துறைகளிலும் பயிற்சி கொடுத்தார்கள்.
கடுமையான அந்தப் பயிற்சிகளை எல்லாம் நான் வெற்றியுடன் செய்து முடித்தேன். பின்னர், நானே ஒரு பத்திரிகையைத் தொடங்கி நடத்த முடியுமா என்பதைச் சோதிக்க, என்னை நெல்லைக்கு அனுப்பினார்கள். அங்கு “நெல்லை மாலை முரசு” மாலை இதழைத் தொடங்கி நடத்தும் முழுப் பொறுப்பையும் ஏற்றேன். சென்னைக்கு வெளியே தொடங்கப்பட்ட முதல் மாலைப் பத்திரிகையான “நெல்லை மாலை முரசு” திக்கெட்டும் வெற்றி உலா வந்தது.
அதன்பிறகுதான், தினத்தந்தியின் நிர்வாகப் பொறுப்பைப் பெரிய ஐயா அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள்.
மக்கள் பத்திரிகையாகத் தொடங்கப்பட்ட “தினத்தந்தி”, மக்களை வளர்த்து தானும் வளர்ந்தது. மதுரையில் மூவாயிரம் பிரதிகளுடன் தொடங்கப்பட்ட “தந்தி” படிப்படியாக வளர்ந்து, தமிழ் மக்களின் அன்பான ஆதரவினால் 1956-ம் ஆண்டு, விற்பனையில் முதல் இடத்தைப் பெற்றது.
பெரிய ஐயா அவர்கள் “தந்தி”யைத் தொடங்கியபோது, பாமர மக்களையும் நாளிதழ் படிக்கச் செய்ய வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தார்கள். அந்தக் குறிக்கோளில் வெற்றியும் பெற்றார்கள்.
இன்று தமிழ் மக்கள் கல்வித் தரத்தில் உயர்ந்து நிற்கிறார்கள். கன்னித் தமிழும், காலத்திற்கு ஏற்ப வளர்ந்து வருகிறது. இதற்கு ஏற்ப செய்திகளை வழங்குவதிலும், தொழில்நுட்பத்திலும், “தினத்தந்தி” வளர்ந்தோங்கி வருவதை வாசகர்கள் கவனித்திருப்பார்கள்.”
இவ்வாறு சின்ன ஐயா டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் குறிப்பிட்டுள்ளார்கள்.
நிர்வாகப் பொறுப்பைச் சின்ன ஐயா அவர்களிடம் பெரிய ஐயா அவர்கள் ஒப்படைத்தபோது, சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று நகரங்களில் இருந்துதான் தினத்தந்தி வெளிவந்து கொண்டிருந்தது.
அதன் பிறகு தமது தொலைநோக்குச் சிந்தனையால், தமிழ்நாட்டில் எல்லா முக்கிய நகரங்களிலும் “தினத்தந்தி”யைத் தொடங்கச் சின்ன ஐயா முடிவு செய்தார்கள். அதன்படி கோவை, நெல்லை, வேலூர், கடலூர், சேலம், பெங்களூரு, புதுச்சேரி, ஈரோடு, நாகர்கோவில், தஞ்சாவூர், திண்டுக்கல், மும்பை ஆகிய நகரங்களில் தினத்தந்தி பதிப்புகளைத் தொடங்கினார்கள்.
அவர்கள் காலத்தில் தினத்தந்தியின் விற்பனை எண்ணிக்கை 16 லட்சத்தைத் தாண்டியது. தமிழ்நாட்டின் “நெம்பர்-1” நாளிதழ் என்ற பெருமையை அடைந்தது. தினமும் “தினத்தந்தி”யைப் படித்து மகிழும் வாசகர்கள் எண்ணிக்கை ஒரு கோடிக்கு மேல் என்று புள்ளிவிவரங்கள் பறைசாற்றின.
குழந்தைப் பருவத்தில் ஓராண்டு பெரியம்மா ஜமீலாபாய் ஆதித்தன் இடம் வளர்ந்தவர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார். அதனால் என்றும் அவருக்குப் பெரியம்மாவிடம் தனிப்பிரியம் உண்டு. திருமதி ஜமீலாபாய் ஆதித்தன், சிவந்தி ஆதித்தனாரின் இளமைப் பருவம் பற்றி கூறியதாவது:-
“லண்டனுக்குப் போய் பாரிஸ்டர் (வக்கீல்) படிப்புப் படித்த பெரிய ஐயா (அமரர் ஆதித்தனார்) சிங்கப்பூருக்குப் போய் ஆச்சியம்மாவை மணந்து கொண்டார். அங்கேயே பாரிஸ்டராகத் தொழில் நடத்தினார். அங்கு அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.
இந்த நிலையில் உலகப் போர் தொடங்கியது. ஐரோப்பாவில் தொடங்கிய போர், சிங்கப்பூர் வரை வந்துவிட்டது. உடனே பெரிய ஐயா மனைவி, பிள்ளைகளை ஊருக்கு (தமிழ்நாட்டுக்கு) அனுப்பி வைத்தார். அடுத்த சில வாரத்தில் சிங்கப்பூரில் ஜப்பான்காரன் குண்டு போடவே, பெரிய ஐயாவும் ஊருக்குத் திரும்பினார்கள்.
அவர் மதுரையில் ‘தந்தி’ தொடங்கினார். குடும்பமும் மதுரையில் இருந்தது. அங்கேயே பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள்.
போர் முடிந்தது. பெரிய ஐயாவும் ஆச்சியம்மாவும் வீட்டை காலி செய்துகொண்டு வர சிங்கப்பூருக்குப் போனார்கள். அப்போது பிள்ளைகளை என்னிடம் விட்டுச் சென்றார்கள்.
அப்போது நாங்கள் ஸ்ரீவைகுண்டத்தில் வசித்துக் கொண்டிருந்தோம். அங்குள்ள குமரகுருபரர் உயர்நிலைப்பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்தோம்.
சின்ன ஐயாவை (டாக்டர் சிவந்தி ஆதித்தனார்) ஆறாம் வகுப்பில் சேர்த்தோம். அவர் படுசுட்டி. விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். நன்றாகப் பேசுவார்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் எங்கள் வீடு. எனவே, பிள்ளைகளை ஆற்றில் குளிக்கப் பெரியப்பா (எஸ்.டி. ஆதித்தன்) அழைத்துப்போவார். நீச்சலும் கற்றுக் கொடுத்தார். ‘பெரியப்பாதான் எங்களுக்கு நீச்சல் சொல்லிக்கொடுத்தார்’ என்று இப்போதும் பிள்ளைகள் சொல்லுவார்கள்.
ஆறாம் வகுப்பு முடிந்ததும், பிள்ளைகள் மதுரைக்குப் போய்விட்டார்கள். அங்கே பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். சென்னைக்குப் போன போது அங்கே பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள்.
சின்ன ஐயா (டாக்டர் சிவந்தி ஆதித்தனார்) கல்லூரியில் படித்து, பெரிய ஐயாவிடம் பயிற்சி பெற்று, சொந்தப் பத்திரிகை நடத்த நெல்லைக்கு வந்தார்கள். “மாலை முரசு” பத்திரிகை தொடங்கினார். அப்போதும் பெருமாள்புரத்தில் எங்கள் வீட்டில்தான் தங்கினார்.
காலை ஏழு மணிக்கு அலுவலகத்திற்குப் புறப்பட்டுப் போவார். மதியம் எப்போது சாப்பிட வருவார் என்று சொல்ல முடியாது. இரவு ஏழு மணிக்கு மேல் வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவார்.
காலையில் புறப்படும்போதே கேமராவை எடுத்துக்கழுத்தில் தொங்கப்போட்டுக்கொண்டு போவார். அவரே போய் செய்திகள் சேகரிப்பார், படங்கள் எடுப்பார், அச்சு எந்திரங்களைக் கையால் சுழற்றி ஒட்டுவார், அச்சிட்ட பத்திரிகைகளைக் கட்டி தனது காரில் ஏற்றித் தானே கொண்டு சென்று வெளியூர்களுக்கு பஸ்ஸில் ஏற்றி அனுப்புவார் என்று ஆபீஸ் ஆட்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.
வேலை அதிகம். சாப்பிடக்கூட நேரம் கிடைக்காது. புதிய முயற்சி, ஆட்களும் புதியவர்கள். எனவே, தானே எல்லா வேலைகளையும் நேரடியாகச் செய்வார். அழுக்குப் பார்க்க மாட்டார், இழுக்குப் பார்க்க மாட்டார். அவர் பட்ட பாட்டுக்குப் பலன் கிடைத்தது. பெரிய வெற்றி பெற்றார். அதற்குப் பரிசாகத் “தினத்தந்தி” கிடைத்தது. தினத்தந்தியின் நிர்வாகியாக ஆனார்.
இவ்வாறு ஜமீலாபாய் ஆதித்தன் கூறினார்.
தமிழகத்தில், பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர் யார் என்று கேட்டால், “டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்” என்று அனைவரும் கூறுவார்கள். தமிழ்நாட்டில், “தினத்தந்தி” என்ற மாளிகைக்கு அடித்தளமிட்டவர், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார். அதில் தாஜ்மஹால் போல் பளிங்கு மாளிகையை எழுப்பியவர், அவர் மைந்தர் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார். பத்திரிகைத் துறையில் மட்டும் அல்ல, விளையாட்டு, ஆன்மிகம், கல்வி… இப்படி பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தார். “கொடை வள்ளல்” என்றும் புகழ் பெற்றார். ஒருவர் ஒரு துறையில் மேதையாக இருக்கலாம். பல்வேறு துறைகளில் இவரைப்போல் சாதனை படைத்தவர் என்று வேறொருவரை சுட்டிக்காட்டுவது இயலாத காரியம்.
“தினத்தந்தி”யின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டபொழுது, அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், அந்த விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
அண்ணா பேசும்பொழுது கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்:-
“ஓர் அமைப்பைத் தோற்றுவிப்பது என்பது மிகக் கடினம். ஆனால் நல்லமுறையில் அமைந்த ஓர் அமைப்பினை யாரிடத்தில் ஒப்படைக்கிறோமோ, அவர்கள் அதில் ஒரு துளி அக்கறை காட்டவில்லை என்றால், எவ்வளவு திறமையாக அந்த அமைப்பை அமைத்து இருந்தாலும், வெகு விரைவிலேயே அது கலைந்து விடக்கூடிய ஆபத்து உண்டு.
அந்தவிதமான நிலையில்லாமல், ஆதித்தனார் அமைத்துக் கொடுத்த “தினத்தந்தி” நல்ல முறையில் இன்னும் நல்ல வளர்ச்சி அடையத்தக்க வகையிலே – மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் விரும்பிப்படிக் கத்தக்க “தினத்தந்தி” இதழ் இன்றைய தினம் நடக்கிறது என்றால், அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும் நம் மதிப்பிற்குரிய நண்பர் ஆதித்தனாரின் திருமகன் சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கு அதிலே உரிய பங்கு உண்டு.
ஆதித்தனார் ஒரு நல்ல அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டும் அல்லாமல், அந்த அமைப்பைத் தொடர்ந்து நடத்தத்தக்க பிள்ளையையும் பெற்றெடுத்தார் என்பது அவரது தனிச்சிறப்புக்கு எடுத்துக்காட்டு ஆகும்.”
இவ்வாறு அண்ணா கூறினார்.
தென்காசி விசுவநாத கோவில் ராஜகோபுரம், தீக்கோளினால் இரண்டாகப் பிளவுபட்டது. இருநூறு ஆண்டு காலமாக மொட்டைக் கோபுரமாக இருந்த இந்தக் கோபுரத்தை 9 நிலை கொண்ட 178 அடி உயரத்திற்கு வானளாவும் ராஜகோபுரமாகக் கட்டி, 25.06.1990 அன்று சிறப்பாகக் குடமுழுக்கு விழாவும் நடத்தி வைத்தார், சிவந்தி ஆதித்தனார்.
கோவில் கட்டிய காலத்தில், இக்கோபுரத்தைக் கட்டி முடிக்க அரசனுக்கே 50 ஆண்டு ஆயிற்று. ஆனால் சிவந்தி ஆதித்தனார் ஆறே ஆண்டுக்குள் கட்டி முடித்துச் சாதனை செய்தார்.
இந்தச் சாதனையைப் பாராட்டி, குடமுழுக்கு விழாவில் சிவந்தி ஆதித்தனாருக்கு “இரண்டாவது பராக்கிரம பாண்டியன்” என்ற விருது வழங்கப்பட்டது.
காஞ்சி சங்கராச்சாரியார் “ஆஸ்திக சிகாமணி” என்று பட்டம் அளித்தார். கவுமார மடத்தின் தலைவர் சுந்தர அடிகள் “திருப்பணி வேந்தன்” என்று பட்டம் வழங்கினார்.
அந்நாளைய அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் அவர்கள், “பராக்கிரம பாண்டியனே மீண்டும் சிவந்தி ஆதித்தனாகப் பிறந்து வந்து இத்திருப்பணியைச் செய்திருக்கிறார்” என்று பாராட்டினார்.
சிவந்தி ஆதித்தனாரின் அறக்கொடைகளைப் போற்றி அவருக்கு “செம்மனச் செம்மல்” என்று திருமுருக கிருபானந்த வாரியார் பட்டம் அளித்தார்.
சிவந்தி ஆதித்தனார் ஆற்றிய பொதுப் பணிகளைக் கூர்ந்து கவனித்து வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., 1982-ம் ஆண்டு சென்னை மாநகரின் செரீப் ஆக சிவந்தி ஆதித்தனாரை நியமித்து சிறப்பித்தார். தொடர்ந்து 2-வது முறையாக 1983-ம் ஆண்டுக்கும் செரீப் ஆக நியமிக்கப்பட்டு, புதிய வரலாறு படைத்தார்.
(தினத்தந்தி பவள விழா மலர் 2017-ல் இருந்து)


