தூத்துக்குடி – மதுரை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில், எப்போதும்வென்றான் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், இப்பணி நடைபெறும் இடங்களில் போதிய பாதுகாப்பு வசதிகளோ, முறையான மாற்று சர்வீஸ் சாலையோ அமைக்கப்படவில்லை. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும், பணி நடைபெறும் பகுதிகளில் இரவு நேரங்களில் தேவையான மின் விளக்குகளோ அல்லது வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையிலான எச்சரிக்கைப் பலகைகளோ வைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் தொடர் விபத்துகள் நிகழும் அபாயம் நிலவி வருகிறது.

எனவே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உடனடியாகச் சம்பந்தப்பட்ட எப்போதும்வென்றான் பகுதிய நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து, உடனடியாகச் சீரான சர்வீஸ் சாலை அமைக்கவும், போதிய வெளிச்சம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தியுள்ளனர்.