குரும்பூர் அருகே உள்ள பாட்டக்கரை பத்திரகாளி அம்மன் கோயிலில் 2,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள பாட்டக்கரை பத்திரகாளி அம்மன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் 2-ஆவது செவ்வாய்க்கிழமையன்றும் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆவணி மாத திருவிளக்கு பூஜை ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டன.
தொடர்ந்து, மழை வேண்டி 2,008 விளக்குகள் ஏற்றித் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட பெண்கள் “ஓம் சக்தி, பராசக்தி” என முழக்கமிட்டு அம்மனை வழிபட்டனர். இப்பூஜையில் மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர், குரும்பூர், ஆழ்வார்திருநகரி, ஏரல், தென்திருப்பேரை, நாசரேத், சாத்தான்குளம், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சந்திரம்மாள் பூஜையை நடத்தி வைத்தார். இதில் கோயில் நிர்வாகிகள் ஜெயராகவன், விஜயராகவன் மற்றும் சிற்பி கணேசன் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாசரேத் முத்துக்குமார் செய்திருந்தார்.


