தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கொசுப்புழு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அனைத்து வார்டுகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா உத்தரவின்படியும், மாநகர நல அலுவலரின் அறிவுரைப்படியும் நேற்று (16.08.2026) தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 18 (பிரிவு 12)-ல் உள்ள ராஜகோபால் 10-வது தெருவில் 132 குடியிருப்புகள், 11 காலி மனைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள 2 கி.மீ. தொலைவில் உள்ள பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன.
கொசுப்புழு உருவாகும் பிளாஸ்டிக் பாட்டில்கள், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப், தேங்காய் ஓடுகள், டயர்கள், பாக்கு மட்டைத் தட்டுகள், பெயிண்ட் டப்பாக்கள், உடைந்த குடங்கள், பழைய காலணிகள், இளநீர் கூடுகள் மற்றும் பிரியாணி/சால்னா டப்பாக்கள் போன்ற பொருட்கள் பொதுமக்களின் ஒத்துழைப்போடு கண்டறியப்பட்டன.
ஆய்வு செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 395 கிலோ கொசு உற்பத்தி மூலங்கள் (Source Reduction) மாநகராட்சி களப்பணியாளர்களால் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. மாநகராட்சிப் பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா எனத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேற்கு மண்டலப் பகுதிகளில் ‘Indoor/Outdoor fogging’ மூலம் புகைமருந்து அடிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று ராஜகோபால் நகர் 10-வது தெருவில் TND காலனி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழு மூலம் வீடு வீடாகச் சென்று காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளதா எனச் சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகள் தொடர்ந்து அனைத்து வார்டு பகுதிகளிலும் நடைபெற உள்ளதால், ஆய்வு செய்ய வரும் மாநகராட்சி களப்பணியாளர்களுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர். சி. பிரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.


